சென்னை, திருவொற்றியூர் அருகே அரிவாக்குளத்தில் 48 வீடுகள் கொண்ட குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்புகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றன. அங்கு B பிளாக்கில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்து சேதமான நிலையில் இருந்தன. வீட்டின் கூரைகள் இடிந்து விழுவது தொடர்பாக பலமுறை அப்பகுதி மக்கள் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்குப் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையே நேற்று (டிச.27) காலையில் திடீரென சம்பந்தப்பட்ட வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, அவை இடிந்து விழுந்தன. முன்னதாக அங்கு ஆய்வுக்குச் சென்ற திருவொற்றியூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலரும் திமுக பகுதி செயலாளருமான தனியரசு, அங்கு தங்கி இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினார். தனியரசுவின் சமயோசிதத்தால் அங்கு நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தனியரசுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் விரிவாகப் பேசினார் தனியரசு. அவர் கூறும்போது, ''நேற்று காலை 8.30 மணி வாக்கில் அங்கு குடியிருக்கும் பெண்கள் சிலர், வீட்டில் விரிசல் ஏற்பட்டு வருவதாகவும் என்னை வந்து பார்க்கும்படியும் அழைத்தனர். அந்தப் பகுதியில் 3 முறை கவுன்சிலராக இருந்ததால் வீடுகளில் தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பிரச்சினை என்றாலும் குடியிருப்புவாசிகள் என்னை அழைத்துக் கூறுவர்.
அந்த வகையில், கட்டிடத்தின் நிலை குறித்து அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் ஊடகங்களை அழைத்துக்கொண்டு ,சுமார் 9.30 மணிக்கு சம்பவ இடத்துக்குச் சென்றேன். கீழே விரிசல் குறைவாக இருந்தாலும் மேலே செல்லச்செல்ல அதிகமாக இருந்தது. 4-வது மாடியில் அதிகளவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
சந்தேகம் ஏற்பட்டதில் கீழே இறங்கி, பக்கவாட்டில் சென்று பார்த்தேன். மண் இறங்குவதுப்போலச் சப்தம் கேட்டது. உடனடியாக மேலே சென்று, அங்கிருந்த அனைவரையும் கீழே அழைத்து வர முடிவெடுத்தேன். 'வாங்க வாங்க' என, எல்லோரையும் சத்தம்போட்டுக் கீழே கூட்டி வந்தேன். கட்டிட விரிசல் குறித்து மக்களிடம் எதுவும் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால், ஆதாரை எடுக்கிறேன். ரேஷனை எடுக்கிறேன், நகை வேண்டும் என்றுகூறி, மக்கள் தாமதப்படுத்தி விடுவார்களோ என்று பயந்தேன். வரமாட்டேன் என்று சொன்ன சிலரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தேன்.
எல்லோரையும் கீழே அழைத்து வெளியே வந்த சில நிமிடங்களிலேயே கட்டிடம் இடிந்து விழுந்தது. ஒருவேளை பக்கவாட்டில் விழுந்திருந்ததால் அங்கு நின்று கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அதில் மாட்டியிருப்போம். நல்லவேளையாக கட்டிடம் அப்படியே கீழே அமர்ந்தவாக்கில் இடிந்தது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மக்களும், 'தக்க சமயத்தில் வந்து காப்பாற்றி விட்டீர்கள்' என்று நன்றி தெரிவித்தனர்'' என்றார் தனியரசு.
கட்டிடம் இடிந்து விழுந்ததும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மாவட்டச் செயலாளர்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார் தனியரசு. அதேபோல அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநராட்சி ஆணையர், குடிசை மாற்று குடியிருப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்துக்கு வந்திருக்கின்றனர். உயிரிழப்பு ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ என்று எல்லோரும் அச்சப்பட்ட சூழலில், யாரும் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் தனியரசு. அவர் சொன்னதுபோலவே அத்தகைய அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை.
இதை அறிந்து முதலமைச்சர் ஸ்டாலினே தனியரசுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். முதலமைச்சரைச் சந்தித்தது குறித்துக் கேட்டபோது, ''எனக்குக் கிடைக்கவே கிடைக்காத பாக்கியமாக இதை நினைக்கிறேன். வாழ்த்துகள், உன்னைப் பாராட்டுவதன் மூலம் தமிழ்நாட்டில் உதவும் நபர்கள் இன்னும் உருவாக வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார்'' என்று தனியரசு நெகிழ்ந்தார்.