செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி இருந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து உருவாகும் கிளி ஆறு மூலமாக, தண்ணீர் மதுராந்தகம் ஏரியை வந்தடையும், மதுராந்தகம் ஏறியானது 23 அடி கொள்ளளவை கொண்டது. மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேறும் நீரை வைத்து பல ஏரிகளுக்கு நீர் செல்வது வழக்கம். மதுராந்தகம் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருப்பதால் அதை தூர்வாரி , ஏரியின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய மதுராந்தகம் ஏரி தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மதுராந்தகம் ஏரியின் கரையை பலப்படுத்தும் வேலையும் நடைபெற்று வருவதால், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு வரும் தண்ணீர் அப்படியே திருப்பி வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருவதால், மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது அதிகரித்து வண்ணம் இருந்தது. அது திருப்பி வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுராந்தகம் ஏரியிலிருந்து நேற்று சுமார் 200 கன அடி நீர் வெளியேறிய நிலையில், தற்பொழுது 600 கன அடி நீர் மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேறி வருகிறது. தொடர்ந்து மழை அதிகரிக்கும் போது மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை அறிவிப்பு
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.