செங்கல்பட்டு மாவட்டம் கீரல்வாடி என்ற கிராமத்தில், நெடுஞ்சாலைத் துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய பசுமை தாயகத்தினர்.
நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் , அடுத்த முதுகரை கிழக்கு கடற்கரைச் சாலை, கடலூர் கிராமம் வரை மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் அமைந்துள்ள ஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம், பனை மரம் உட்பட 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மரங்களை வேரோடு பிடிங்கி மாற்று இடம் பள்ளி கூடம், குளம், பூங்காக்கள், நீர் பிடிப்பு பகுதியில் நட வேண்டியும் - செங்கல்பட்டு பசுமைத்தாயகம் சார்பாக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து, மெழுகுவத்தி ஏற்றி இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (02.09.2023) கீரல்வாடி கிராமத்தில் நடைபெற்றது.
இதில் பசுமைத்தாக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு, மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மரத்திற்கு இறுதி அஞ்சலி, செலுத்திய சம்பவம் அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.
சமூக வலைத்தளத்தில் பரவும் புகைப்படங்கள்
மரத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பசுமைத்தாயகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஓட்டகோயில் நா.சுரேஷ் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் பசுமைத் தாயகம், மாநிலத் துணைச் செயலாளர் ஐ .நா.கண்ணன், செங்கற்பட்டு தெற்கு மாவட்ட பசுமைத் தாயகம் ஆலோசகர் கி. குமரவேல் மற்றும் மோகனரங்கம் , அன்பு, வினோத்குமார், கிளியா நகர் சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பசுமைத் தாயகம் சார்பில் வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில், வைரலாக பரவி வருகிறது. வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக, நிறைய மரங்கள் நட வேண்டும் என சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்து வருகிறார். மரங்களுக்கு அஞ்சலி செலுத்துவது , மனிதத்தன்மையின் உச்சம் எனவும் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள சூனாம்பேடு ஊராட்சியில் 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வெட்டப்பட்டதற்கு எதிராக, பாமகவினர் மற்றும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில், ஈடுபட்டதை தொடர்ந்து வெட்டப்பட்ட ஆலமரம், வேறு இடத்தில் நடப்பட்டு துளிர்விடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.