கோயம்பேடு பேருந்து நிலையம் ( koyambedu bus terminus )
 
அதிக அளவு மக்கள் வசிக்கும் சென்னையில் பிரதான பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மிக முக்கிய பேருந்து நிலையமாக விளங்கிவரும்,  கோயம்பேடு பேருந்து நிலையம் (Koyambedu bus Stand)  ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும், திறன் கொண்டது. சென்னையில் உள்பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தால் குறிப்பாக தொடர் விடுமுறை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ( Kilambakkam ) ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன், புதிய பேருந்து  நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2021 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது.




ஆனால் நிலம் கையகப்படுத்துதல், தொல்பொருள் பகுதி என்பதால் எழுந்த சிக்கல், கொரோனா பெருந்தொற்று, ஊழியர்கள் பற்றாக்குறை, கட்டுமானப் பணிகளில் தாமதம், முதன்மை பீடத்தில் வேலைகள் முடிவடையாதது என இழுபறியாய் சென்று கொண்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து பணிகளை குறித்து நேரடியாக கண்காணித்து பணிகளை முடிக்க துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.  




இதன் அடிப்படையில், அவ்வப்போவது, துறை அதிகாரிகளும் அமைச்சர்களும், தொடர் ஆய்வு மேற்கொண்டு  பணிகளை  வேகப்படுத்தினர்.  இப்பொழுது பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. விரைவில் பேருந்து முனையம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருந்து நிலையத்திற்கு " கலைஞர் நூற்றாண்டு  பேருந்து நிலையம் " ( kalaignar centenary bus stand ) என பெயர் வைக்கப்பட்டுள்ளது


அடுத்தக்கட்ட திட்டம்தான் என்ன ?


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை படிப்படியாக இரண்டிலிருந்து, மூன்று கட்டங்களாக இயக்குவதற்கான திட்டங்களை அரசு சார்பில் வகுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து   நெரிசலின்றி, செல்வதற்கு வசதியாக அயன்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும்  சி.வே.கே. சாலை முதல் ஊரப்பாக்கம் வரையிலும், புது சாலை அமைக்கும் பணிகள் குறித்தும், முடிச்சூர் பகுதியில் புதியதாக  ஆம்னி பேருந்து நிறுத்தம்  உள்ளிட்டவற்றை  அமைக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது.


பேருந்து நிலையத்தை பராமரிக்க என்ன திட்டம் ? ( kilambakkam bus terminus )


கிளாம்பாக்கம் பணிகள் நிறைவடைந்தாலும்,  செயல்பாட்டுக்கு வருவதற்கான முன்னெடுப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை   பராமரிக்கும் பணியை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்  டெண்டர் மூலமாக , தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 




விமான நிலையம் பராமரிப்பு  மாதிரியாக எடுத்துக் கொண்டு, சுகாதாரமான  பேருந்து   நிலையமாக கிளம்பாக்கம் செயல்பட  முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  டெண்டர் மூலமாக ஒப்பந்ததாரர் தேர்வு  செய்யப்பட உள்ளனர். அந்த வளாகத்தை இயக்கி பராமரிக்க,  கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம், விளம்பரங்கள் போன்ற  இதர வழியில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.