Chennai: சென்னையில் நிர்ணயம் செய்யப்பட்ட வேகத்தை மீறி பயணம் செய்ததற்காக முதல் நாளே ரூபாய் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


வேகக் கட்டுப்பாடு:


 தலைநகர் சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். இப்படி சாலைகளில் டிராபிக் அதிகரிப்பதால் விரைவாக ஒரு இடத்திற்குச் சென்று சேர முடியவில்லை.


இதனால் சென்னையில் பலரும் வாகனங்களை அதிவேகமாக இயக்குகிறார்கள்.  இதனால் சென்னையில் வாகன விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே நாட்டில் அதிக வாகன விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது.


ஏற்கனவே, சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி உடன் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது. மேலும், விபத்துகளை குறைக்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் சென்னையில் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. 


அபராதம் விதிப்பு:


வேகக் கட்டுப்பாடு விதிமுறை அமலுக்கு வந்த ஒரே நாளில் பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேகக் கட்டுப்பாடு விதியை  மீறிய நான்கு கார்கள், 117 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுகுறித்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் கூறியதாவது, "சென்னையில் வாகனங்களை வேகமாக ஒட்டியதாக 120 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வேக கட்டுப்பாடு அமலில் உள்ளது. பெரும்பாலானோர் வேக கட்டுப்பாடு  முறையை அமல்படுத்த ஆதரவு தெரிவித்தனர். ஸ்பீட் ரேடார் கன் (Rador Gun) எனப்படும் அதிநவீன கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறையான ஆய்வுகளுக்கு பிறகே வாகன வேக கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது" என்றார். 


எவ்வளவு வேகத்தில் செல்லலாம்?


பெருநகர சென்னையில் உள்ள சாலைகளில் இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 60 கி.மீ ஆகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், ஆட்டோக்களின் அதிகபட்ச வேக வரம்பு 40 கி.மீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வகை வாகனங்களுக்குமான அதிகபட்ச வேக வரம்பு 30 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகவேகமாக சென்றால் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 2 ஆயிர ரூபாயும் அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே,  வாகன ஓட்டிகள் இந்த புதிய வேக வரம்பைக் கடைபிடிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.