தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள், பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது. தேர்தல் நடத்தப்படாததால் இந்த மாவட்டங்களின் ஊராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் முடங்கிப்போய் உள்ளன. இந்த தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு உறுதி அளித்தது. செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இன்னும் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கூடுதல் அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தேர்தல் நடத்தும் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 



 

இது தொடர்பாக 6 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே, வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த 31ம் தேதி, தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்கள் மற்றும் தேர்தல் முடிந்து காலியாக இருக்க கூடிய ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



 

இந்நிலையில், சென்னை அருகே உள்ள பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூரில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஊரக தொழிற்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கடந்த 3 மாதங்களாக எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், 13 கோடி மதிப்பில் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படம் பொறிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் புத்தக பை வீணாக்காமல், அதே புத்தக பையை வழங்க உத்தரவிட்டவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார்.



 

மேலும் வரும் 13ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும், சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X