கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. முதலாம் அலை தொற்று குறைந்த நிலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்றே கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்ததால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி போனது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 




பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கூடங்கள் திறப்பதையொட்டி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கூடங்களை திறப்பது தொடர்பாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.




கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிைலை பள்ளியில் பள்ளிகள் திறக்கப்பட்ட மறுநாளே பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பின் ,  கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியைகளுக்கும் மற்றும் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது முதல் முறையாக பண்ருட்டி அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் அரசு  பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.




இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு பிறகு தற்பொழுது தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளிக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு தான் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஒன்றாம் தேதி ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர தொடங்கினர்.




இந்நிலையில் நேற்று 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் 14 மாணவர்களுக்கும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.  இதனால் அடுத்து மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மூலம் பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.