சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.


சென்னையில் அதிகரித்த மின் பயன்பாடு


வெயில் காலங்களில் மின்சார தேவை என்பது அபரிமதமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமான அளவில் இருப்பதால், மக்கள் வெயிலின் தாக்கதில் இருந்து மீள குளிர்ந்த ஜுஸ், தண்ணீர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். வீட்டில் ஏசி வைத்திருப்பவர்கள் எந்நேரமும் ஏசி-யை போட்டு வைக்க வேண்டிய சூழலில் உள்ளனர். குளிர்சாதன பெட்டிகள், ஏசி, ஏர் கூலர்கள், ஃபேன்கள், என எல்லாவற்றின் தேவையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. ஆனால் ஆய்வுகளின்படி வீட்டு உபயோகத்தை காட்டிலும், கடைகளுக்கான மின் தேவை தான் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிககின்றன. ஆனாலும் தடையில்லாமல் மின்சாரம் தந்ததாக கூறிய செந்தில் பாலாஜி வெளியிட்ட டிவீட்டில் முதல்வர் ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு மின்வாரியம் என்று பெருமையாக கூறியுள்ளார்.



அமைச்சர் டிவீட் 


சென்னையில் முதன்முறையாக நேற்று ஒரு நாளில் 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தனது டுவீட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவீட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது, "முதன்முறையாக சென்னையில் நேற்று முன் தினம் (08/06/2023) 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 02/06/2023 அன்று 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. சென்னையின் நேற்றைய மின் தேவை 3872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்களுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது," என்ற எழுதிய டிவீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: TNPL: டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா 7-வது சீசன், வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது... சேலத்தில் 10 போட்டிகள்..


காரணம் என்ன?


“சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அதிகமான மக்கள் நகரத்தில் குடியேறுவதால், உள்நாட்டில் தேவை அதிகரித்து வருகிறது. 2013 மற்றும் 2023 க்கு இடையில், நகரத்தின் தேவை 25 சதவிகிதமும், நுகர்வு 60 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், நகரின் மின் தேவை 3,027 மெகாவாட்டாக இருந்தது, இந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி, தேவை 3,778 மெகாவாட்டைத் தொட்டது, இது ஒட்டுமொத்த கேரளாவின் தேவையான, 4,500 மெகாவாட்டிற்கு அருகில் உள்ளது" என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) தலைவர் ராஜேஷ் லக்கானி முன்பு கூறினார். 






வணிக தேவை அதிகரிப்பு


வணிகத் தேவை குறித்து கருத்துத் தெரிவித்த அவர், மாநகராட்சிப் பகுதியின் கீழ் வரும் முக்கிய நகரப் பகுதிகளிலிருந்து தற்போது பல பெரிய கடைகள் திறக்கப்படுகின்றன என்றார். “முன்பெல்லாம் அண்ணாசாலையிலும் பாரிஸ் கார்னரிலும் பெரிய கடைகள் இருந்தன. ஆனால் தற்போது தி.நகர் பெரிய கடைவீதியாக மாறியுள்ளது. பல கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டு அனைத்து விளக்குகள் மற்றும் ஏசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது தி.நகர் தாண்டி, நகரின் பிற பகுதிகளில் பெரிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள் அனைத்திற்கும் மும்முனை மின்சாரம் மற்றும் தொடர் விநியோகம் தேவை. பல ஆண்டுகளாக, நகரத்தின் உள்நாட்டு தேவையுடன் வணிக தேவையும் அதிகரித்து வருகிறது," என்று கூறினார்.