மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது 47 ஆண்டுகளுக்கு பிறகு  வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்த காரணத்தால் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை மழை கொட்டித் தீர்த்ததால் ஒட்டுமொத்த சென்னையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மோசமான பாதிப்பைச் சந்தித்தது.


வெள்ளக்காடான வேளச்சேரி:


பெருமழை பெய்யும் என்று ஏற்கனவே கணித்ததால் மாநகராட்சி சார்பில் 16 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்தது முதலே பல இடங்களில் தண்ணீரை அகற்றுவதற்கு போதியளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக, நேற்று இரவு முதலே சென்னையில் மழைநீர் தேங்கிய பல பகுதிகளில் இன்று காலை மழைநீர் முற்றிலும் வடிந்தது.






ஆனால், சென்னையில் எப்போதும் சாதாரண அளவில் மழை பெய்தாலே மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்திக்கும் பகுதியாக திகழ்வது வேளச்சேரி ஆகும். இந்த சூழலில், சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் வேளச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் தண்ணீர் மிகவும் மோசமாக தேங்கியுள்ளது. பல இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும் காட்சி அளிக்கிறது.


மடிப்பாக்கம், வடசென்னை:


வேளச்சேரியை போல மடிப்பாக்கம் பகுதியிலும் தேங்கிய மழைநீர் இன்னும் வற்றாமல் இருக்கிறது. அங்கும் தண்ணீர் இடுப்பளவு வரையில் இருப்பதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


வட சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மூலக்கொத்தளம், மிண்ட், கொடுங்கையூர், ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. மூலக்கொத்தளத்தில் மார்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் 2015 வெள்ளத்தின்போது ஏற்பட்ட பரிதாப நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.


வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், முட்டியளவு தண்ணீர் புகுந்தும் காட்சி அளிக்கப்படுகிறது. முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் பகுதியில் வீனஸ் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் இதுவரை தேங்கியுள்ளது.


மேலும் படிக்க:  Cyclone Michaung: நொடி பொழுதில் காரின் மீது சரிந்த கட்டிடம்; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்; பதைபதைக்க வைக்கும் வீடியோ


மேலும் படிக்க: Chennai Rain 8 Death: மிக்ஜாம் புயலால் எவ்வளவு உயிரிழப்பு? போக்குவரத்து மாற்றம்? மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் லிஸ்ட்! - முழு விவரம்