Cyclone Michaung: புயல் பாதித்த இக்கட்டான நேரத்தில் அனைவரும் இணைந்து இயற்கை இடரை வென்று வருவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத கனமழை:
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுப்பாக்கம் - 29 செ.மீ., நுங்கம்பாக்கம் - 24 செ.மீ., மீனம்பாக்கம் - 19 செ.மீ. மழை பெய்துள்ளது.
தொடரும் மீட்பு பணிகள்:
மழைநீர் சூந்துள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்பது, முகாம்களுக்கு கொண்டு செல்வது, தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவது, அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மறுமுனையில், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது, சாலையில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றுவது, மின்சார விநியோகத்தை மீண்டும் தொடங்குவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
"அனைவரும் இணைந்து இடரை எதிர்கொள்வோம்”
படகுகளை வாடகைக்கு எடுத்தது மட்டுமின்றி, மீனவர்களின் படகுகளும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓர்ரு நாட்களில் சென்னை முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த புயலால் சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். முருகன், கணேசன், பரத், செல்வம் மற்றும் மிராஜுல் இஸ்லாம் ஆகிய 6 பேருடன், அடையாளம் தெரியாத இரண்டு உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ”அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.