தமிழகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மாணவர்கள் எழுதி வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு, ஒரே நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன இந்நிலையில் இன்று நடந்த தேர்வில் பலத்த கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குன்னம் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 781 நபர்களும் சுங்குவார் சத்திரம் மகரிஷி பன்னாட்டு பள்ளியில் 213 நபர்களும் படப்பை ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளியில் 840 நபர்களும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 480 நபர்களும் என 2314 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காஞ்சிபுரம், வேலூர் ,செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை முதலே பெற்றோருடன் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு முன்பு காத்திருந்தனர்.
பின்பு 11 மணி முதல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்டறிந்து பின்பு மாணவர்களை 2 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொருவராக வரவழைத்து விண்ணப்பங்களை ஆய்வு செய்து பின்னர், உடல் முழுவதும் பரிசோதனை செய்து தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மாணவர்களை சோதனைக்கு உட்படுத்துகிறோம் என்கிற பெயரில் தலை முதல் கால் வரை மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்தனர்.
வருடந்தோரும் நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே, புதுபுது சோதனைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு காலில் மெட்டி போடக்கூடாது என்று கூறினார். அதேபோல் இந்த ஆண்டு தேர்வு எழுத வந்த மாணவர்களின் தலைமுடியை முழுமையாக பரிசோதனை செய்ய பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்த மாணவிகள் தலைவிரி கோலமாக வரிசையில் நின்றிருந்த மாணவிகளை பெற்றோர் சோகமாக பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் பின்னலிட்ட மாணவிகள் சடைமுடி எல்லாம் சோதித்து பார்த்த பிறகு தேர்வு நடத்தும் அலுவலர்கள் மாணவிகளுக்கு தலைவாரி சடை பின்னி விட்டார்கள்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்முறையாக, ஆறு நீட் தேர்வுமையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆறு மையங்களில் மொத்தம், 2,001 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் அனைவரும் முழு பரிசோதனைக்கு பிறகே நீட் தேர்வு மையத்திற்குள் அனுப்பப்பட்டனர்.