சென்னை விமான நிலையம்


 

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 17,42,607 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் உள்நாட்டு விமான பயணிகள் 12,97,049. சர்வதேச விமான பயணிகள் 4,45,558. அதேபோல் விமானங்களின் எண்ணிக்கை 11, 405. அதில் உள்நாட்டு விமானங்கள் 8,751. சர்வதேச விமானங்கள் 2,654. சென்னை விமான நிலையத்தில் மார்ச் மாதத்தில்,17,31,770 பயணிகள் 12,022 விமானங்களில் பயணித்துள்ளனர். ஒப்பிடுகையில், எனவே கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதம் பயணிகளின் எண்ணிக்கை 10,837 அதிகரித்துள்ளது. ஆனால் விமானங்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதம் 617 விமானங்கள் குறைவாக இயக்கப்பட்டுள்ளன.


 

பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு

 

இதைப்போல் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து விமானங்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்னவென்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுவதாவது, கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு தேர்வு காலமாக இருந்தது. அதோடு விடுமுறைகளும் தொடங்கவில்லை. இதனால் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. எனவேதான் மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதம் பயணிகள் எண்ணிக்கை 10,000 தான் அதிகரித்துள்ளது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் வந்துள்ள, பண்டிகை கால விடுமுறை நாட்களில், அதிகரித்த பயணிகள் கூட்டம்தான். மற்றபடி வழக்கமான பயணிகள் மட்டுமே பயணித்தனர். பயணிகள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு இல்லாமல் குறைவாக இருந்ததால், விமான நிறுவனங்கள், விமானங்களை குறைத்து இயக்கின. அதனால் தான் மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது‌.

 

மே  மாதத்தில்

 

அதே நேரத்தில் தற்போதைய மே மாதத்தில், பள்ளி கல்லூரிகள் விடுமுறைகள் தொடங்கி விட்டன. அதோடு கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கைகளும்  அதிகரித்துள்ளன. எனவே இந்த மே  மாதத்தில் சென்னை விமான நிலையத்தில், இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும், பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம், இவ்வாறு கூறுகின்றனர்‌.