163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான வகுப்புகள் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இதுவரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படாமல் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகப் பள்ளிகள், கல்லூரிகள் முழுமையாக இயங்காமல் இருந்ததும் முக்கியக் காரணமாக இருந்தது.
இதற்கிடையே கடந்த ஜூலை 19-ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணியைத் தொடங்க மாநில அரசு தீவிரம் காட்டியது. இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்கம் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவை ஜூன் 22ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் https://tngasa.org/, https://tngasa.in/ என்ற இணையதள முகவரிகளில் முன்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது. அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு தொடங்கி உள்ளது. விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆன்லைன் முறையில் அல்லாமல், நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
அந்தந்தக் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் தற்போது கலந்தாய்வு தொடங்கி உள்ளது.
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உள்ள 1,106 இடங்களுக்கு 95,136 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், சிறப்புப் பிரிவு கலந்தாய்வுக்கே நூற்றுக்கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்