சென்னை மெட்ரோ ரயில் சேவையில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜுன் மாதத்தில் அதிகப்படியான பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் அறிக்கை:
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி “ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 869 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் விவரங்கள்:
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63 அலட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்தில் 85 ஆயிரத்து 432 பயணிகளும் மற்றும் மே மாதத்தில் 72 லட்சத்து 68 ஆயிரத்து 007 பேரும் பயணம் செய்துள்ளனர். அதேநேரம், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 74 லட்சத்து 6 ஆயிரத்து 876 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 28.06.2023 அன்று ஒருநாள் மட்டுமே 2 லட்சத்து 95 ஆயிரத்து 509 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
பயணச்சீட்டு விவரங்கள்:
நடப்பாண்டு மே மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 25 லட்சத்து 15 ஆயிரத்து 727 பயணிகளும், பயண அட்டைகளை (Trivel Card Ticketing System) பயன்படுத்தி 44 லட்சத்து 81 ஆயிரத்து 995 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 3 லட்சத்து 98 ஆயிரத்து 131 பயணிகளும், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5 ஆயிரத்து 85 பயணிகளும் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5 ஆயிரத்து 938 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
முன்பதிவு வசதி:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (491 83000 86000) மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ பணி:
ஆரம்பத்தில் மெட்ரோ ரயில் பயன்பாடு என்பது சென்னை மக்களிடையே குறைவாகவே இருந்தாலும், தற்போது அது இன்றியமையாத பொதுப்போக்குவரத்தாக மாறியுள்ளது. இதனால் தான் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.)3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.