வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளி என்கின்ற காளிதாஸ் என்பவரை படுகொலை செய்தனர். இந்நிலையில் காளிதாஸ் குடும்பத்தினரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.





செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி (எ) காளிதாசன். இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க தலைவராக இருந்தார். அப்பகுதியில் வன்னியர் சங்கத்தின் மிக முக்கிய நபராக இருந்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார்.  



இந்தநிலையில் கடந்த மாதம் 12ஆம் தேதி காளிதாஸ் , மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பிரபல டீ மட்டும் ஜூஸ் கடையில் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது வெள்ளை நிற காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென டீ கடைக்குள் புகுந்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் காளிதாஸ்சின் தலையில் சரமாரியாக வெட்டினர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் . உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியினர் அப்பொழுது சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

 

 அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல்

 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் படுகொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக சிலர் நீதிமன்றத்தில் சரண் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸ் குடும்பத்தினரை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான உதவிகளை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்தார். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்த கொலை மிகக் கொடூரமான கொலை. மாவட்ட தலைவர் காளிதாஸ் கொலை வழக்கில் இன்னும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  ஏதோ பெயரளவில் குற்றவாளிகளை கைது செய்து உள்ளனர் .மேலும் கொலைக்கான காரணம் என்ன இந்த கொலைகள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் இல்லையென்றால், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடுமையான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.  அதற்கு முன்பாக காவல்துறையினர் அவர்களுடைய கடமைகளை செய்ய வேண்டும். பிரதான ஜிஎஸ்டி சாலையில் , பட்ட பகலில் இந்த கொலை நடைபெற்றுள்ளது” என தெரிவித்தார்.


 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.