மக்கள் பிரதிநிதிகள் - பொதுவான குற்றச்சாட்டு
தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்றவர்கள் வரவில்லை என பல இடங்களில் குற்றச்சாட்டை முன் வைத்து பொதுமக்கள் வேட்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. தங்கள் குறைகளை நேரடியாக சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்) நேரில் வந்து குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது. ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு என தனி பாணியை பின்பற்றி வருகின்றனர்.
"குரல் கேட்போம் குறை களைவோம்"
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் "குரல் கேட்போம் குறை களைவோம்" திட்டத்தை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தினம் சிறுதாவூர் ஊராட்சியில் துவங்கினார். இதன் மூலம் மே மாதம் இரண்டாம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை இந்த செயல் திட்டத்தின் மூலம், இதன்படி ஒவ்வொரு நாளும் மாலை ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு ஒருவர் வீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தங்குவார்.
அடுத்த நாள் காலை 7 மணி அளவில் தொடங்கி 11 மணி வரை அந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று கிராம நிலவரம் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார். மக்களின் தேவை என்ன என்பது குறித்தும் அவர்கள் கோரிக்கை குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்வார். இதை வைத்து மானிய கோரிக்கை விவாத கூட்டத்தொடர் நடைபெறும் பொழுது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்பு திருமணங்கள் ஆகியவற்றில் மக்கள் பிரச்னை குறித்து பேச இந்த செயல் திட்டம் உதவி செய்யும் என நம்புகிறார் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.பாலாஜி
ஆய்வை துவங்கிய எம்எல்ஏ
சிறுதாவூர் கிராமத்தில் ஆய்வு செய்தவர், அங்குள்ள அரசு பள்ளி கட்டிடம் குளம் சீரமைப்பு பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுவது என ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து அருகே உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆமூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து காரணை, குன்னப்பட்டு பையனூர் உள்ளிட்ட ஊராட்சிகளை ஆய்வு செய்தார். 84 கிராமத்தையும், மூன்று பேரூராட்சி பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு மாத காலத்தில் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.
இதுகுறித்து எஸ்.எஸ். பாலாஜி பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் முடிவிற்காக ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தேர்தல் நடைவிதி அமலில் உள்ளதால், ஒரு மாதம் தள்ளிப் போவதின் பேரில் ஒரு மாத கால இடைவெளியை பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு குரல் கேட்போம் குறை களைவோம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக தெரிவித்தார். ஒரு மாதத்தில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து சனிக்கிழமை மாலை, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் முன்தினம் மாலை பொழுதே ஊராட்சிக்கு சென்று இரவு தங்கி மறுநாள் காலை 7 மணி முதல் அந்த ஊராட்சியில் ஆய்வு செய்ய உள்ளேன் .
அடுத்த , மூன்று நான்கு ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்வது என்றும் ஆய்வு செய்யும் போது மக்களின் பிரச்சினைகளை மக்களுடைய கோரிக்கைகளை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் கருத்தை கேட்டும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வது சம்பந்தமாகவும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிந்து கொண்ட அனைத்து தகவல்களையும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விவாதிக்க ஏதுவாக இத்திட்டத்தை செயல்படுத்துவதாக தெரிவித்தார்.