தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் "ஃபெஞ்சல்" புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுவையிலிருந்து கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று (30-11-2024) மதியம் சூறவாளி புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக கடலோரப் பகுதிகளாக இருக்கக்கூடிய மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று அதிகமாக வீச தொடங்கி இருப்பதால் மழையும் பெய்ய தொடங்கியுள்ளது. இந்தநிலையில் காற்று வேகமாக வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை துண்டிக்கவும் மின் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக திருக்கழுகுன்றம், மாமல்லபுரம் மற்றும் திருப்போரூர் ஆகிய துணை மின் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. 


காற்றின் வேகத்திற்கு ஏற்ப தேவையான இடங்களில் மின்சாரத்தை துண்டிப்பதற்காகவும் அதே போன்று புயல் தரையை கடத்தப் பிறகு உடனடியாக மின்சாரத்தை கொடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டத்தில் செய்யூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் இருளில் முழ்க தொடங்கியுள்ளது.