மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் இந்திய நாட்டியவிழா இன்று தொடங்கியது. விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கவுரவிக்கப்பட்டனர்.

Continues below advertisement

மாமல்லபுரம் நாட்டிய விழா 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட விழா நேற்று தொடங்கியது. 

ஜனவரி 19-ந்தேதி வரை ஒரு மாதம் இவ்விழா நடைபெறுகிறது. மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் திறந்தவெளி மேடையில் நேற்று தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக சுற்றுலாத்துறை செயலாளர் தா.கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், முன்னிலை வகித்தார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் த.சக்திவேல் வரவேற்றார். 

Continues below advertisement

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கவுரவம்

இவ்விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராஜேந்திரன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நாட்டிய விழாவை தொடங்கி வைத்து, விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சால்வைகள், பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். 

விழாவில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், சுற்றுலாத்துறை இணை இயக்குனர் அ.சிவப்பிரியா, செங்கல்பட்டு சப்-கலெக்டர் மாலதி ஹெலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல் நாள் விழாவான நேற்று கரகாட்டம், காவடியாட்டம், பரத நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

இவ்விழாவில் அமெரிக்கா, சீனா, சுவீஸ், கனடா, பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் கலந்து கொண்டனர். மேலும் ஒரு மாத விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு வாயில் பகுதியில் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதி சார்பில் விழாவை கண்டுகளிக்க வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குறைந்த விலை உணவகமும் அமைக்கப்பட்டு இருந்ததை காண முடிந்தது.