Tambaram – Chengalpattu 4th railway line: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான 4-வது பாதை அமைப்பதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பணிகள் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு
இந்தியாவின் மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக ரயில் சேவை இருந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் மூலம் பயணித்து வருகின்றனர். தெற்கு ரயில்வேயில் சென்னை கூட்டத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் இணைக்கக்கூடிய ரயில்கள் முக்கியத்துவம் ரயில்களாக பார்க்கப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக தினமும், 500-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூருக்கு அடுத்த ரயில் முனையமாக தாம்பரம் ரயில் முனையம் உருவாக்க தொடங்கியுள்ளது. ஏராளமான தென் மாவட்டத்திற்கு செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
முக்கியத்துவம் பெரும் செங்கல்பட்டு
சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையமாக உருவெடுக்க தொடங்கியுள்ளன. சென்னை நகர் பகுதிக்குள் சென்று, தென் மாவட்டத்திற்கு செல்பவர்கள் ரயில்களில் பயணிப்பதை காட்டிலும், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் இருந்து ரயிலில் பயணிப்பது எளிதாக இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையங்களாக உருவெடுத்து வருகின்றன.
மூன்று வழி பாதை
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ஏராளமான மின்சார ரயில்கள், செங்கல்பட்டு வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் மூன்று வழித்தண்டவாளங்கள் மட்டுமே இந்த தடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்குவதில் ரயில்வே துறைக்கு சிக்கல் நீடித்து வருகிறது. எதிர்வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, கூடுதல் மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ள நிலையில், நான்காவது வழிப்பாதை அமைப்பது தொடர்பான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
நான்காவது ரயில் வழித்தடம்
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 757 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்காவது ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 30 ஹெக்டேர் (Hectare) நிலம் ரயில்வே துறைக்கு தேவைப்படுகிறது. இதில் 23 ஹெக்டேர் (Hectare) நிலம் ஏற்கனவே தெற்கு ரயில்வே வசம் உள்ளது. மீதம் 7 ஹெக்டேர் (Hectare) நிலம் மட்டுமே கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதிலும் 4 ஹெக்டேர் (Hectare) நிலம் அரசு நிலமாக இருப்பதால் எளிதாக கையகப்படுத்தி விடலாம், மீதமுள்ள மூன்று ஹெக்டேர் (Hectare) நிலங்கள் கையகப்படுத்துவதில் மட்டுமே சிறிதளவு சிக்கல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பம்சங்கள் என்ன ?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்தில் உள்ளதால், சென்னை மற்றும் சென்னை புறநகர் இணைக்கக்கூடிய கூடுதல் மின்சார ரயில்களை இயக்க இந்த ரயில் பாதை பயனுள்ளதாக அமையும். அதாவது தற்போது சென்னை புறநகர் பகுதியில் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 1.5 லட்சம் பயணிகள் பயன்படுத்து வருகின்றனர். இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், இந்த ரயில் தளத்தில் தற்போதைய காட்டிலும் 137 சதவீதம் கூடுதலாக ரயில்களை இயக்க முடியும்.
தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவு பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், தினக்கூலிகள், ஐடி ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் இது பயனளிக்கும்.
இந்த ரயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க ஏற்ற வகையில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
பணிகள் தொடங்குவது எப்போது ?
இந்த திட்டம் செயல்படுத்துவதற்கு நிர்வாக அனுமதி ஏற்க்கனவே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நிலம் கையகப் படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஜனவரி மாத இறுதியில், ரயில் பாதை அமைக்கும் பணியும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.