நாளை (03.12.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக் கடலில் உருவான ‘டிட்வா‘ புயல், தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. மேலும், தமிழ்நாட்டை நெருங்கம்போது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பின்னர் சென்னைக்கு அருகே வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து, தற்போது சென்னைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது 12 மணி நேரம் வரை அதே நிலையில் இருந்து, பின்னர் மேலும் வலுவிழந்து, சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 3 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை அடங்கும். சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படவில்லை என்றாலும், மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

Continues below advertisement

செங்கல்பட்டு விடுமுறை 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.