"செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில், புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது"
டிட்வா புயல் - Ditwah Cyclone
வானிலை மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, “தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 05 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 29, 2025 அன்று 2330 மணி இந்திய நேரப்படி மையம் கொண்டு, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளில், அட்சரேகை 10.7°N மற்றும் தீர்க்கரேகை 80.6°E க்கு அருகில், வேதாரண்யத்தில் (இந்தியா) இருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 90 கிமீ, காரைக்காலில் (இந்தியா) இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 90 கிமீ, யாழ்ப்பாணத்தில் (இலங்கை) இருந்து வட-வடகிழக்கில் 130 கிமீ, புதுச்சேரியில் (இந்தியா) இருந்து தென்-தென்கிழக்கில் 160 கிமீ மற்றும் சென்னைக்கு (இந்தியா) தெற்கே 260 கிமீ தொலைவில் டிட்வா மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. வடக்கு நோக்கி நகரும் போது, சூறாவளி புயல் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று (நவம்பர் 30) அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முறையே தமிழ்நாடுv- புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்சம் 50 கிமீ மற்றும் 25 கிமீ தூரத்திற்குள் மையம் கொண்டிருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து.
செங்கல்பட்டு கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம்
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் முதல் புதுப்பட்டினம் வரை 25க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இருக்கின்றன. நாட்டு படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்தல் மற்றும் அது சார்ந்த தொழிலே, இவர்களின் பிரதான தொழிலாக இருந்து உள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கோவளம் முதல் ஆலம்பரைகுப்பம் வரை உள்ள மீனவ கிராமங்களில், புயல் காரணமாக தற்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டு, 4 முதல் 10 அடி உயரத்திற்கு அலைகள் அடிக்கின்றன. மேலும், புயல் கரையைக் கடக்கும் போது கடல் சீற்றம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவளம், நெம்மேலி, பட்டிபுலம், தேவனேரி, மாமல்லபுரம், கொக்கிலி மேடு, சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம் பற்றும் புதுப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.