“நீங்கள் நலமா" மூலம் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி, 24 மணி நேரத்தில் தீர்வு கொடுத்த முதலமைச்சர்..
“நீங்கள் நலமா"
“நீங்கள் நலமா" என்ற புதிய திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 04 தேதி , தலைமை செயலகத்திலிருந்து இருந்து புதிய பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை சதானந்தபுரம் ரோடு, கட்டபொம்மன் தெருவில் வசித்து வரும் அருள் என்ற மாற்றுத்திறனாளியிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளி
அப்போது , அருள் முதல்வரிடம் , நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. என்னுடைய அக்காவின் பெயர் சுகன்யா. அவருடைய வயது 45. எனது அக்காவும் இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளி ஆவார். என்னுடைய சகோதரிக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனும் மன வளர்ச்சி குன்றிய மாற்றத்தினாளி ஆவான். மாதந்தோறும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையாக எனக்கு ரூபாய் 1500ம், என்னுடைய சகோதரிக்கு ரூபாய் 1500ம், என்னுடைய அக்கா மகனுக்கு ரூபாய் 2000ம் உதவித்தொகை மாதம் தோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில் , தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. முதல்வர் சுகன்யா சுரேஷ் யார் என்று கேட்டார். அதற்கு நான் என்னுடைய அக்காவின் பெயர் சுகன்யா சுரேஷ் என்று தெரிவித்தேன். மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வருகிறதா என கேட்டார். அதற்கு மாதந்தோறும் தவறாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை பெற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தேன்.
கோரிக்கை நிறைவேற்றப்படும்
எந்த மாவட்டம் என்று முதல்வர் அவர்கள் கேட்டதற்கு செங்கல்பட்டு மாவட்டம் என தெரிவித்தேன். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகைகள் சரியாக வரப்பெறுகிறதா? என கேட்டறிந்தார். சரியாக வருகிறது என தெரிவித்தேன். மேலும் வேறு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என முதல்வர் அவர்கள் கேட்டார். அதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கண்ணாடி மற்றும் ஊன்றுகோல் தேவைப்படுகிறது என தெரிவித்தேன். உடனே உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் அவர்கள் தெரிவித்தார்.
அடுத்து எனது சகோதரிக்கு வெளியே சென்று வருவதற்கு ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி வண்டியை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். அதையும் முதல்வர் அவர்கள் பெரிய மனதுடன் தருகிறேன் என தெரிவித்தார். மேலும் எனது சகோதரி வருமானம் இன்றி தவிப்பதாக தெரிவித்ததற்கு, சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். எனது மாற்றுத்திறனாளி அக்கா 1500 மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்று வருகிறார். அவர் 90% ஊனமுற்றவர் ஆதலால் மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையினை 2000 ஆக உயர்த்தி தருமாறு கேட்டுக் கொண்டதற்கு முதலமைச்சர் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.
24மணிநேரத்தில் மாறிய வாழ்க்கை
இந்தநிலையில் , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பேட்டரி ஸ்கூட்டர், ஒரு லட்சம் கடனுதவி மற்றும் ரூபாய் 2000 ஆக மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார். முதல்வரிடம் கோரிக்கை வைத்த 24 மணிநேரத்தில், நடவடிக்கை எடுத்ததற்கு முதல்வருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்