செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த  கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளராக இருந்து வருகிறார். கடந்த 4ஆம் தேதி  நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று அசத்தியிருந்தது. திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன.


 



 

அப்பொழுது கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுகவை சார்ந்தவர் வெற்றி பெற்றார். இந்தநிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இத்தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து தோல்வியை தழுவினார்.  

 

சாலை மறியல்


 

இந்தநிலையில், கோவையில் திமுகவினர் ஆட்டிற்கு அண்ணாமலை புகைப்படம் வைத்து நடுரோட்டில் ஆட்டை வெட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதுபோன்று திமுகவினர் செய்யும் செயலை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகை  கிராமத்தை சேர்ந்த  பாஜக பேச்சாளர் சாகுல் அமித் என்பவர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்குவதற்காக வருகை தந்தார்.  

 



 

அப்பொழுது அவர் திடீரென செங்கல்பட்டு பிரதான  சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நாடாளுமன்ற தேர்தல் முடிவு அடைந்து நடைபெற்ற முதல் குறை தீர்ப்பு கூட்டத்தில் , பாஜக நிர்வாகி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

திமுகவினர் கொண்டாட்டம்


 

தொடர்ந்து கோவை அதிமுக கோட்டையாக பார்க்கப்பட்டு வந்தது. சமீபத்தில் கோவை மாவட்டத்தில் பாஜக வளர்ந்திருப்பதாகவும் கோவை தொகுதியில் தாங்கள் வெற்றி பெறுவோம் என பாஜகவினர், நம்பி வந்தனர். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் திமுக மற்றும் பாஜக இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் தான் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு வேட்பாளர்களின் தோற்கடித்து திமுக கோவையில் வெற்றி பெற்றது.

 


ஒற்றைய ஆளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி பாஜக ஆதரவாளர்


 

வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில்,ஆட்டுக்கறி பிரியாணி திமுக தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. சில இடங்களில் ஆட்டை துன்புறுத்தி வெட்டியதாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது தொடர்பாக பாஜகவை சேர்ந்தவர்கள் அறிக்கைகள் மற்றும் பல்வேறு பாஜக தலைவர்கள் பேட்டி அளித்து வந்தனர். பாஜகவின் ஆதரவாளர் ஒருவர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.