திமுக ஆட்சி வணிகர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இருந்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் 42வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநில தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வணிகர் சங்க மாநாட்டை துவக்கி வைத்தார்.
வணிக தீவிரவாதம்
இந்த மாநாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி, வரம்பற்ற பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், சுங்கக் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை ஒன்றிய அரசு கட்டுபாடின்றி உயர்த்துவதை கண்டித்தும், இந்திய வணிகத்தின் மீது அமெரிக்க அதிபர் டிரம்பின் கண்மூடித்தனமான வரிவிதிப்பை கண்டித்தும், அமெரிக்க அதிபரை வணிக பயங்கரவாதி என முன்மொழிந்தும், தேர்தல் சமயங்களில் 50,000-க்கும் மேல் எடுத்து செல்ல முடியாமல் பறிமுதல் செய்யும் காவல் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் அநியாயங்களை கண்டித்து உள்ளிட்ட 12-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன ?
இந்நிகழ்வில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் விவசாயம், தொழிற்சாலையை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. வணிகர்களின் 42 வணிகர் தின மாநாட்டில் கலந்து கொள்வதை நான் பெருமையுடன் கருதுகிறேன். வணிகர்களின் பாதுகாவலனாக கூறி கொள்ளும் திமுக அரசு காங்கிரஸூடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் அந்நிய முதலீடு மசோதாவிற்கு ஆதரவு அளித்தன என தெரிவித்தார்.
குறு, சிறு வணிகர்களை பாதிக்கும் அந்திய முதலீட்டிற்கு ஆதரவு தந்தது திமுக அரசுதான். திமுக ஆட்சி வணிகர்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இருந்து வருகிறது. ஆளுங்கட்சியினரால் வணிகர்களிடம் இருந்து மாமூல் வசூலிக்கப்படுகிறது. கஞ்சா போதை ஆசாமிகள் பரோட்டா, பிரியாணி கேட்டு வணிகர்களை தாக்குவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வணிகர்களுக்கு எதிரான கட்சி
திமுக எப்போதும் வணிகர்களுக்கு எதிரான கட்சியாக உள்ளது. வணிகர்களை பிரிப்பது திமுகவிற்கு கைவந்த கலை எனவும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் இந்த ஆட்சியில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த திமுக அரசாங்கம் தவற விட்டு அதனை வியாபாரிகள் மீது பழி போடுகிறது திமுக அரசு. மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்த பிறகு வணிகர்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும், திமுக அரசை அகற்றி அதிமுக வெற்றி பெற வணிகர்களும் ஆதரவு தரவேண்டும் என பேசி முடித்தார்