Chengalpattu new bus stand Update: "செங்கல்பட்டு பகுதியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி 60% நிறைவடைந்துள்ளது"
வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் செங்கல்பட்டு - Chengalpattu District
சென்னை சுற்றுவட்டார பகுதிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அதிக அளவு வேலைவாய்ப்புகள் குவிந்திருக்கின்றன. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும், கடந்த சில வருடங்களாக புதியதாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் இட நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு பேருந்து நிலையம் - Chengalpattu Bus Stand
புறநகர் மாவட்டங்களும் சென்னைக்கு நிகரான வளர்ச்சியை அடைந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட தலைநகராக இருக்கக்கூடிய செங்கல்பட்டில், தற்பொழுது இருக்கும் பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதி, கல்பாக்கம், வந்தவாசி, மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காலை மற்றும் மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு, தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தொடங்கியது.
செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் - Chengalpattu New Bus Stand
இதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகள், தொடர்பான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. இறுதியாக செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான சுமார் 40,274 சதுர மீட்டரில் (சுமார் பத்து ஏக்கர் பரப்பளவு) பிரமாண்டமான புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைய முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: Kilambakkam Metro: எல்லாமே மாறுது.. கிளாம்பாக்கம் டபுள் டக்கர் மெட்ரோ.. 13 ஸ்டேஷன்கள்.. செங்கல்பட்டு வரை மேம்பாலம்..!
இந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 14 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் கூடிய முனைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 936 சதுர மீட்டர் பரப்பளவில் எரிபொருள் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தரை மட்டத்திலிருந்து 16 அடி வரை உயர்த்தி பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக அருகில் இருந்த பொன்விளைந்த களத்தூர் என்ற பகுதியில் இருந்து, மண் எடுத்து வந்து கொட்டப்பட உள்ளது.
பயன்பாட்டிற்கு வருவது எப்போது ? Chengalpattu New Bus Stand Opening Date
செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் பணிகள், 60% தற்போது நிறைவடைந்துள்ளனர். அடுத்த கட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து பணிகளும் முடிவடைந்து வருகின்ற செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.