Chennai Beach To Chengalpattu Train Cancelled: சென்னை மாநகர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கக்கூடிய மிக முக்கிய போக்குவரத்தாக, ரயில் போக்குவரத்து உள்ளது. குறிப்பாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லக்கூடிய மின்சார ரயில்களில், நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். தினமும் இந்த ரயில்கள் இயக்கப்பட்டாலும், பராமரிப்பு பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் காரணமாக அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்கள்
அந்த வகையில் சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே நான்காவது புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது ரயில் பாதைகள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்கான பணிகள் நாளை நடக்க உள்ளது. இதனால் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டுத்தடத்தில், நாளை காலை 5:10 மணி முதல் மாலை 4:10 மணி வரை 11 மணி நேரம் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது என அந்த அறிவிப்பை தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4:10 மணிக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா? எளிய வழிமுறை இதோ..!
மாற்று ஏற்பாடுகள் என்ன?
தொடர்ந்து 11 மணி நேரம் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதால், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் முதல் தாம்பரம் இடையே காலை 5:15 மணி முதல் மாலை 4:15 மணி வரை 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று மறுமார்க்கமாக தாம்பரம் முதல் கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை அதிகாலை 4:10 மணி முதல் மாலை 3:45 மணி வரை 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதேபோன்று தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு காலை 5: 50 மணி முதல் மாலை 4:25 மணி வரை 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு இடையே அதிகாலை 4 மணி முதல் 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.