செங்கல்பட்டு ரயில் நிலையம் ரூ.22.14 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.


 


செங்கல்பட்டு ரயில் நிலையம் - chengalpattu new railway station


சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. தொடர்ந்து வெளியூர் மக்களின் குடியேற்றமும் அதிகரித்து வருகிறது.  செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெரும்பாலான நபர்கள் ஐ.டி ஊழியர்களாகவும், தனியார் நிறுவன ஊழியர்களாகவும், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களாகவும் உள்ளனர். செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்களை பயன்படுத்தும் பொது மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தை தினமும் சுமார் 60 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். 




செங்கல்பட்டு ரயில் நிலையம் என்பது, பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.மேலும் தென் மாவட்டத்திற்கு செல்வதற்கு பிரதான ரயில் நிலையம் ஆகவும் செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது. இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு ரயில் நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டு அதை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில், உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது. 


அம்ரித் பாரத் - Amrit Bharat


இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைக்கும் வகையில், "அம்ரித் பாரத் " என்ற ரயில் நிலையின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி ,சேலம், மதுரை உள்ளிட்ட ஆறு கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடையாளம் காணப்பட்டு படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதன் ஒரு பகுதியாக  சென்னை புறநகர் பகுதியில் முக்கிய ரயில் நிலையமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு ரயில் நிலையத்தை, அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் மறு சீரமைக்கும் பணியை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டது.  




 திட்டத்தின் பயன் என்ன ?


அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தை மறு சீரமைக்க சுமார் 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துவக்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்பொழுது கட்டிடங்கள், நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணிகள், துவங்கி நடைபெற்று வருகின்றன. பயணிகள் தங்குவதற்கு என மூன்று ஓய்வு அறைகள் கட்டப்பட உள்ளன. பயணிகள் தங்கும் ஓய்வு அறையில் ஏசி வசதி செய்யப்பட உள்ளன, அதே போன்று ஏசி வசதியுடன் காத்திருக்கும் அறைகள், கூடுதல் வாகனம் இருக்கும் வசதி, அதிநவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் தகவல் பலகைகள், லிப்ட் மற்றும் எக்ஸ்குலேட்டர் வசதிகள், ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.




 எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் ?


முக்கியமாக ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது சாலை அமைக்கும் பணிகள் 50% நிறைவடைந்துள்ளது, நடைமேடைகள் மறுசீரமைப்பு பணிகள் 80 சதவீதமும், லிப்ட் அமைக்கும் பணிகள் என்பது சதவீதமும் ரயில் நிலையம் கட்டுமான பணிகள் 20% நிறைவேற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்துள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது