கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் 2-மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்


தொடரும் மின்வெட்டு 


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பின்றி மின்வெட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமிநகர், சத்யசாய்நகர், அம்பாள்நகர், விஷ்ணுபிரியாநகர், நெல்லிகும்பம்சாலை ஆகிய மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர்.


பொதுமக்கள் வேதனை 


அப்பொழுது மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


போலீசார் சமாதானம்


தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.


முன்னறிவிப்பு இன்றியும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டாலும் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதி அடைவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் முன்னறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது‌.


அமைச்சர் சொன்ன விளக்கம்


கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்ட அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் கூடுவாஞ்சேரி பகுதியில் , மின்வெட்டு ஏற்படுவதாக அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதற்கு பதில் அளித்து பேசி அமைச்சர், ஒரு சில இடங்களில் பழுது காரணமாக மின்வெட்டு நடைபெறுவது இயல்பு என்ற தொனியில் பதிலளித்தார்.