மாவட்ட ஆட்சியரை சந்திக்க பொதுமக்கள் உள்ளே நுழைந்தபோது தடுக்க முயன்ற காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஆகியவற்றை தூக்கி எறிந்து போராட்டம் நடத்தினர்.


தொடர் போராட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வயலூர், நெற்குணம் ஆகிய கிராமங்களில் புதியதாக அமையுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் தொடர்ந்து, மனு அளிக்க வந்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.



மூடப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்... கொதித்தெழுந்த மக்கள் - நடந்தது என்ன ?


புதிய கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்திருந்த நிலையில் அவர்களை காவலர்கள் வெளியே தடுத்து நிறுத்தியதாக புகார் 


தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு


காவலர்களை தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றபோது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிற்கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் வாசல் முன்பு அமர்ந்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பொதுமக்கள் அவதி


தொடர்ந்து போராடத்தில் ஈடுபட்ட வந்தவர்களை தடுப்பதற்காக கதவுகள் அடைக்கப்பட்டதால், பல்வேறு தேவைக்காக மனு கொடுக்க வந்த பொது மக்களும் பாதிப்படைந்தனர். அவர்களையும் போராட்டக்காரர்கள் என நினைத்து காவல்துறையினர் உள்ளே அனுமதிக்காததால் மனு கொடுக்க முடியாமல் ஏராளமானோர் தவித்தனர். ஒரு சிலர் காவலர்களிடம் எடுத்துச் சொல்லியும் காவலர்கள் கேட்காமல் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. 




மேலும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, எங்களை மனு கூட கொடுக்க விட மாட்டார்கள், எங்களுக்கு ஏன் இந்தியாவின் அடையாள அட்டை எனக் கூறி வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஆகியவற்றை தூக்கி எறிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிராம மக்கள் சொல்வது என்ன?


இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரிடமும் மனு கொடுத்து விட்டோம். ஒருவரும் எங்களை ஏரெடுத்து கூட பார்ப்பதில்லை. அவர்களுக்கு பணம் தேவை என்பதால் எங்கள் ஊரை, அழித்துவிட்டு நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். 


எங்கள் ஊருக்கு கல்குவாரி வேண்டாம் என எட்டு மாதங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். உண்ணாவிரத போராட்டம் கூட இருந்து உள்ளோம். காவல்துறையினர் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை, மாறாக போராட்டம் நடத்தினால் உங்களை கைது செய்வோம் என மிரட்டுகிறார்கள். 




மாவட்ட ஆட்சியர் ஒருமுறை கூட எங்களை பார்க்கவில்லை. அதனால் எங்களுக்கு எதற்கு அடையாள அட்டைகள். நாங்கள் வாக்களிப்பது இவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று வாக்களிக்கவில்லை. நாங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று வாக்களித்தோம். கல்குவாரியை கொண்டு வருபவர்கள் அவர்கள் குடும்பத்துடன் வந்து எங்கள் ஊரில் வசித்தால் நாங்கள் கல்குவாரியை ஏற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்