செங்கல்பட்டு மாவட்டம், இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் இளங்கோப்பு வாசு, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் செய்துவந்த இவர், தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகலில் நடந்த கொலை சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் இளம்தோப்பு பகுதியை சேர்ந்த வாசு, காட்டாங்குளத்தூர் முன்னாள் ஒன்றிய சேர்மேனாக பதவி வகித்து வந்தவர் குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனங்களுக்கு கேட்டரிங் சேவைகள் மற்றும் குடிநீர் விநியோகம் செய்துவந்த வாசு, தனது ஓட்டுநர் மற்றும் நண்பர் ஒருவருடன் இளந்தோப்பு பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அருகே மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், கல்லை எடுத்து வீசி மூவரையும் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்கள் வாசுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். வாசுவின் ஓட்டுநர் மற்றும் நண்பர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
காவல்துறையினர் தீவிர விசாரணை
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், வாசுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலைக்கு அரசியல் காரணம் உள்ளதா அல்லது தொழில் போட்டி காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர் . குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறி வைக்கப்படும் பாமக பிரமுகர்கள் ?
கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியை சேர்ந்த, ம.க. ஸ்டாலின் வெடிகுண்டு வீசி கொலை முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாட்களிலேயே செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பாமக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்டு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்படுவார்கள் என்றனர்.