புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் புத்தாண்டு பிறப்பை பொதுமக்கள் கொண்டாடுவதற்காக சென்னை புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு ரெசார்ட்கள் மற்றும் ஓட்டல்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 31.12.2023-ந் தேதி இரவு 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் இதன் கீழ்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
>புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தும் விடுதி உரிமையாளர்கள் காவல் துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறை அனுமதி பெற்றிருக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்பதிவு செய்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
> சம்மந்தப்பட்ட விடுதி மேலாளர்கள் தங்களிடம் முன்பதிவு செய்த விருந்தினர்கள் முன்பதிவு செய்ததற்கான ரசீதை நிகழ்ச்சிக்கு வரும் போது சோதனை சாவடியில் காண்பிக்க முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். முன்பதிவுக்கான ரசீது இல்லாத நபர்களின் வாகனங்களை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்க இயலாது. நிகழ்ச்சி நடைபெறும் விடுதியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அல்லது முன்பதிவு செய்யாத நபர்களை அனுமதிக்க கூடாது.
> நிகழ்ச்சி நடைபெறும் விடுதியில் நீச்சல் குளங்கள் இருக்கும் பட்சத்தில் அதன் மேல் மேடை அமைப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மேலும் நீச்சல் குளம் இருக்கும் இடத்திற்கு அருகே விருந்தினர்கள் செல்லாமல் இருக்க போதிய பாதுகாப்பு அலுவலர்களை நியமிக்கப்பட வேண்டும்.
> நிகழ்ச்சியானது குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பித்து 01.01.2024-ந் தேதி 01.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
> நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதை பொருட்கள் அனுமதிக் கூடாது. விருந்தினர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். மேலும் தற்காலிக ஓட்டுநர்களை போதிய அளவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
> நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வான வேடிக்கைகள் நடத்துவது மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பயன்படுத்துவது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அதிக ஒலி எழுப்ப ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.
> நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களின் வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
> நிகழ்ச்சிக்கு வருகை தரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி உரிமையாளர்கள் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.
> நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்கள் கடலுக்குள் இறங்குவதை உரிய நபர்களை நியமித்து தடுத்திட வேண்டும்.
> நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தீ தடுப்பான் உபகரணங்கள் இருப்பதையும் அவசர மருத்துவ சேவைக்கு மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் இருக்குமாறும் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
> நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்குள் வரையறுக்கப்பட்டநபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மேற்படி விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்யவோ அல்லது காவல் துறை மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இதன் மூலம் அறிவுறுத்தப்டுகிறது. வாகனங்களை குடித்துவிட்டு ஓட்டுதல், வரையறுக்கப்பட்ட நபர்களுக்கு மேல் பயணம் செய்வது மற்றும் வேகமாக வாகனத்தை இயக்குவது ஆகியவை கண்டறியப்பட்டால் மோட்டார் வாகன சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புத்தாண்டு கொண்டாடத்தின் போது பொது இடங்களில் மது அருந்துவது, கூச்சல் மற்றும் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் விதமாக நடந்துகொண்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.