செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 141, புதுப்பட்டு ஊராட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் சாந்தி செல்வம். இவர் பழங்குடியின இருளர் இனத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவர் பதவி வகித்து வருகிறார்.
போலி பில்கள்
இந்தநிலையில் தனக்கு படிப்பறிவு இல்லாததை பயன்படுத்தி, போலி கையெழுத்து போட்டு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை சாந்தி முன்வைத்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் சாந்தி அளித்த புகார் மனுவில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஒரு சில வார்டு உறுப்பினர்கள் இணைந்து போலி பில்களை உருவாக்கி, எனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்துவதாகவும், தனது குடும்பத்தை மிரட்டுவதாகவும் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மேலும் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வது கிடையாது. கிராம சபை கூட்டம் முடிந்த பிறகு வந்து கையெழுத்து போட்டுக் கொள்வது. போதிய படிப்பு அறிவு இல்லாததை பயன்படுத்தி அரசு அறிவிக்கும் திட்டங்கள், அரசு அனுப்பும் சுற்றறிக்கைகள், ஒப்பந்த பணிகள், பஞ்சாயத்து வரவு மற்றும் செலவு கணக்குகள் தனது கவனத்திற்கு கொண்டு வராமலே சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பல்வேறு முறைகேடுகள்
செலவுக்கான பில்களை குறைவாக தன்னிடம் கூறிவிட்டு அதில் கையெழுத்து பெற்று விடுவதாகவும், அவ்வப்போது ஏரி வேலைக்கு எனக்கூறி கையெழுத்து பெறுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். தெரு மின்விளக்குகளை அமைப்பது கையாடல், இருளர் மக்களுக்கு தன்னார்வலர்கள் கொடுத்த பொருட்களுக்கு போலி பில் கொடுத்து பெற்றது, ப்ளீச்சிங் பவுடர் வாங்காமல் பில் போடுவது, என பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
Mens Day 2024 Wishes: சர்வதேச ஆண்கள் தினம்; அன்பிற்குரிய ஆண்களுக்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ்!
நீ என்ன பெரிய தலைவரா ?
இதுகுறித்து சாந்தி கூறுகையில், ஏற்கனவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை வைத்துள்ளார். நீ என்னை பெரிய தலைவரா? என மிரட்டுகிறார்கள். துணைத்தலைவரின் கணவர் என்னை மிரட்டுகிறார்.
கையெழுத்து கேட்க மட்டும் வருவார்கள் விவரம் கேட்டால், சொல்ல மாட்டார்கள் அலட்சியமாக பதில் சொல்வார்கள். ஓடீபி கேட்டால் ஓடிபி சொல்ல வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வந்தார்கள். ஒரு கட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் பிடித்துக் கொடுத்து விடுவோம் எனவும் மிரட்டினார்கள் என தெரிவித்தார்.