செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த, தாய் ஒருவர் தன் மகன் உயிரிழந்து உடல் உறுப்புகளை தானம் செய்த நிலையில், நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு பட்டாளம் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது


திருச்சி - தேசிய நெடுஞ்சாலை


அன்றைய காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பழையனூர், யாதவர் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரது ஒரே மகன் லோகநாதன் (27). எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பு படித்துவிட்டு, சென்னையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில், படாளம்  கூட்டுச்சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கிய லோகநாதன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தலையில் பலத்த காயமடைந்த லோகநாதன் மூளை சாவு அடைந்தார்.


 வாழ்க்கையை புரட்டி போட்ட விபத்து


வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் ராஜலட்சுமி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருவதால், மூளைச்சாவடைந்த தன் மகனை காப்பாற்ற முடியாது என்பதால், லோகநாதனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தார். இதனை அடுத்து லோகநாதனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள் மற்றும் முதுகில் இருந்து தோல் ஆகியவை தானம் செய்யப்பட்டது. ராஜலட்சுமிக்கு கணவர் இல்லாததால், தனது உலகம் தனது மகன் லோகநாதன் என வாழ்ந்து வந்த நிலையில்தான், இந்த அதிர்ச்சி சம்பவம் அவரது வாழ்க்கையை புரட்டி போட்டது.





இச்சம்பவத்திற்கு காரணம் பட்டாளம் பகுதியில் மேம்பாலம் இல்லாததால், தன் மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எண்ணினார். அந்த பகுதியில் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது. எனவே, மேம்பாலம் கட்ட வேண்டும் என அச்சமயத்தில் ராஜலட்சுமி கோரிக்கை வைத்தார் தொடர்ந்து இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் பல்வேறு வகையில் கோரிக்கைகளை முன் வைத்து வந்தார்.


விபத்து நிறைந்த பகுதி


இதுபோக தொடர்ந்து பட்டாளம் பகுதியில் பல்வேறு விபத்துகளும் நடைபெற்று வந்ததால், பல தரப்பிலிருந்து மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கையில் எழுந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக தினமும் விபத்து நடக்கும் அபாயம் நிறைந்த பகுதியாக படாளம் கூட்டுச்சாலை உருவெடுத்தது. இந்தநிலையில் தற்பொழுது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள படாளம் கூட்டுச்சாலையில், மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் துவங்கியிருப்பதால் ராஜலட்சுமி மகிழ்ச்சி அடைந்திருப்பதாக நம்மிடம் தெரிவித்தார். இனி அந்தப் பகுதியில் யாரும் விபத்தால் உயிரிழக்கக் கூடாது என்பது தனது எண்ணம் எனவும் தெரிவித்தார். 


மகிழ்ச்சியில் தாய் ராஜலட்சுமி


இப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் மேம்பாலம் நிச்சயம் பயனளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.




மகன் உயிரிழந்த நிலையில் தனது தாயுடன் வாழ்ந்து வரும் ராஜலட்சுமி, தற்போது தன் மகன் உயிரிழந்த இடத்தில் அவரது நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மகன் மூளை சாவு அடைந்த பிறகு, இதயம் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்த ராஜலட்சுமிக்கு  கிடைத்த வெற்றியாக இதை பார்க்கலாம்.