வாட்ஸ் ஆப் மூலம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்கினார்.
ஒரு சில அரசு அதிகாரிகள்..
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுத்துறை மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் உள்ளன. குறிப்பாக ஒரு சில அரசு அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யாதது. தங்கள் பணி செய்வதற்கு கையூட்டு பெறுவது, அரசு அதிகாரிகள் என திமிரில் நடந்து கொள்வது ஆகியவை ஒருபுறம் நடந்தாலும். மறுபுறம் அரசு அதிகாரிகள் மக்களை நோக்கி செல்லும் சம்பவங்களும் நடைபெற்று தான் வருகிறது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு, வாட்ஸப் மூலம் வந்த புகாருக்கு நேரில் சென்று உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையை புரட்டிப்போட்ட விபத்து
செங்கல்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட பாலூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் என்பவரது மகன் சத்தியமூர்த்தி வயது 39. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி கடந்த 2018-ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, மழையால் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து அவரது இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து அவரது வாழ்க்கையே தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ள நிலையில், விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மனைவி கணவரை பார்த்துக் கொண்டாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தைகளின் படிப்பை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால், மனைவி மற்றும் குழந்தைகள் தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றனர். சத்தியமூர்த்தி தாய்க்கும் வயதாகி வருவதால், சத்தியமூர்த்தியை முறையாக பார்த்துக் கொள்ள முடியாத சூழலில் தாய் தள்ளப்பட்டுள்ளார்.
வாட்ஸ் அப்பில் மனு: நேரில் சென்ற ஆட்சியர்
தாயின் அரவணைப்பில் இருந்த சத்தியமூர்த்தி எனக்கு வீடு இல்லை என்றும் வீட்டு மனைபட்டா வழங்கி, வீடு கட்டி தர மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் ஆப் மூலம் கடந்த மே 27 அன்று தகவல் அளித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதனன்று (மே 29) அதற்கு தீர்வு காணும் வகையில் சத்தியமூர்த்தியை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நேரில் சென்று வீட்டு மனை பட்டா வழங்கி இரண்டு மாதங்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு கட்டி தர வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தர விட்டார். மேலும் மின்சார அடுப்பு மற்றும் சமைப்பதற்கு மின்சார குக்கர் ஆகியவற்றையும் வழங்கினார். மேலும் அவருக்கு மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் ஏற்கெனவே அவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையில் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உதவி செய்திருப்பதால் தனக்கு ஆறுதல் அளித்து இருப்பதாக தெரிவிக்கிறார் சத்தியமூர்த்தி. மாவட்ட ஆட்சியர் செய்துள்ள இந்த உதவி தனக்கு, மிகுந்த பயன் தரும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கிறார் சத்தியமூர்த்தி