செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை தனி அடையாள எண் பெறாத விவசாயிகள், வரும் 15.11.2025-ம் தேதிக்குள் முகாம்களில் பதிவு செய்து அடையாள எண் பெற்று பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரர் தி.சினேகா, அழைப்பு விடுத்துள்ளார்.

Continues below advertisement

சிறப்பு முகாம்

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு நில விவரங்களை சரிபார்த்து தனிப்பட்ட விவசாயிகள் அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னணு முறையில் அனைத்து விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவு தளத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம். விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

Continues below advertisement

எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை

அரசு திட்டங்கள் சரியாக பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்டங்கள் பெற்றுக்கொள்ள முடியும். பிரதமரின் கவுரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் பதிவு திட்டத்தின் மூலம் தரவுகளை சரிபார்த்து அவரவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இப்பணி மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் கிராம அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்துக்கும் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் வருகை தந்து தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

எனவே, விவசாயிகள் தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் கொண்டு இம்முகாம்களிலும் மற்றும் அருகில் உள்ள CSC பொது சேவை மையங்களிலும் எதிர்வரும் 15.11.2025-க்குள் பதிவு செய்து பயனடையலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.