திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு  பிப்ரவரி 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. 96 அடி உயரம் 350 டன் எடை கொண்ட இந்த பிரம்மாண்ட தேர் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும்.இந்த திருவிழாவை காண்பதற்காகவும் தேரை வடம்பிடித்து இழுப்பதற்காகவும் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்கள் அண்டை நாடுகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூருக்கு வந்திருந்தனர். 

 



 

திருவாரூர் ஆழித்தேர் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் அழகை காண்பதற்காகவும், குறிப்பாக திருவாரூர் ஆழித்தேர் என்பது அந்த நான்கு வீதிகளிலும் உள்ள திருப்பங்களில் திரும்பும் அழகை காண்பதற்காகவே பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று அதனை கண்டு ரசித்தனர்.மேலும் இந்த திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப் படும் பொழுது பக்தர்கள் ஆரூரா தியாகேசா என்று பக்தி பரவசத்துடன் உணர்வு பெருக்கெடுத்து முழக்கங்கள் எழுப்பினர். 



 

திருத்தேர் ஆனது மாலை நேரத்தில் வடக்குவீதி அருகே வந்து கொண்டிருந்த பொழுது இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அமைதியை விட வலிமையான ஆயுதம் எதுவுமில்லை என்பதை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆழித்தேர் வடக்கு வீதியில் நின்று கொண்டிருந்த இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். இது தேரோட்டத்திற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரஷ்யா உக்ரைன் போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காவும், அங்கு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதனை செய்ததாக ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர்.

 

அதுமட்டுமன்றி ஆழித்தேர் ஆனது நிலையடிக்கு வந்து கொண்டிருந்த பொழுது ஒரு தனியார் பல் மருத்துவமனை கட்டிடத்தில் சிக்கிக்கொண்டதால் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த சுவரின் முனைப் பகுதி இடிக்கப்பட்டு பிறகு தேரோட்டம் தொடங்கியது. அதனால் ஒரு மணிநேரம் தேர் நிலையை அடைய தாமதமானது. இதையடுத்து இந்த தேரானது நேற்று இரவு 8 மணிக்கு நிலையடிக்கு வந்து சேர்ந்தது. இதனை அங்கு திரண்டிருந்த சிவனடியார்கள் மேளதாளங்கள் முழங்க கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இந்த தேர் கட்டுமான பணிகளில் பரம்பரையாக ஈடுபட்டு வரும் போது கொத்தனார்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.