முதலமைச்சர்ர் குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் வாட்சப் குரூப்களில் தவறான தகவலை பரப்பிய முன்னாள் டிஜிபியும், அதிமுக எம் எல் ஏவுமான நட்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


 


அவதூறு கருத்துகள்:


முன்னாள் டிஜிபியும், அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம் எல் ஏவாக இருந்தவர் நட்ராஜ். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் உயர் அதிகாரிகள் மற்றும் பிரபல நடிகர்கள் உள்ள வாட்சப் குரூப்பில் இருந்துள்ளார்.


அதில் தமிழ்நாடு அரசு பற்றியும், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும் அவதூறு கருத்துகளை கூறி வந்ததாகக்கூறப்படுகிறது.


இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெறுவோமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்கள் வாக்கு பெறும் அளவிற்கு திமுக தரம் தாழ்ந்து போகவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் போலியான கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாகவும் நட்ராஜ் அந்த வாட்சப் குரூப்பில் கூறியிருந்ததாக  ஸ்க்ரீன்ஷாட்டும் பரவியது.


வாட்சப் குரூப்பில் தவறான தகவல்களை பரப்பும் முன்னாள் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் சிலர் வலியுறுத்தி வந்தனர்.


இந்த செய்தி வெளியாகும்:


இந்நிலையில், இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ”ஒரு போலீஸ் அதிகாரி, உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர், நான் கூறியதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்துக்கள் ஓட்டுகள் வேண்டாம் என நான் சொன்னதாக பதிவு செய்துள்ளார். இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன்.  இன்று இந்த செய்தி வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார். 


இந்நிலையில், திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த  ஷீலா என்ற வழக்கறிஞர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு:


அந்த புகாரில் தவறான செய்திகளை பதிவிட்டு தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் ஏன்ற உள்நோக்கத்துடனும், மதக்கலவரங்களை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் பதிவிட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது, 153 A, 504, 505(1)(b), 505(1)(c), 505 (2), 66 IT act (2008) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.