திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் திருவிக நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஒன்றைரை ஆண்டுகளாக  வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டபோது இந்த மின் கோபுரத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறி விக்னேஷ் மின்வாரிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


இது குறித்து விக்னேஷ் கூறுகையில், குடியிருக்கும் வீட்டில் இருந்து 15 அடி தூரத்தில் தான் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க வேண்டும் என்று அரசாணை இருப்பதாகவும்,அதனை மீறி அதிகாரிகள் வீட்டில் இருந்து 6 அடி. தூரத்தில் மின் கோபுரம் அமைக்க முற்படுவதாகவும், அது குறித்து நான் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எங்களது செப்டிக் டேங்கையும், கழிவறையையும் இடித்துவிட்டு அந்த இடத்தில் டவர் கட்ட அதிகாரிகள் முனைவதாகவும், மேலும் இந்த மின் கோபுரத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.


இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, இது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திட்டமிட்ட பணி என்றும்,மாவட்டம் முழுவதும் 56 உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க உள்ளதாகவும், 54 கோபுரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 2 உயர் மின் அழுத்த கோபுரத்திற்கு மட்டும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்,பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் தான் இந்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன எனவும் கூறினர். மேலும் இப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் வருவாய் துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள், நில அளவையர்கள், காவல்துறை அதிகாரிகள், திருவாரூர் மின் வாரிய செயற்பொறியாளர், மின்வாரிய அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என பலர் அங்கு வந்திருந்து வீட்டு உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.