வேலூரில், நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்திக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து  செல்போன், பணம் மற்றும் நகையை பறித்து சென்றுள்ளது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 


அதில், “வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிரச்சினையை இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார். வேலூர் மாவட்டம். ஒரு சத்துவாச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்த இராமன் என்பவர் கடந்த 17-3-2022 அன்று சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வ.உ.சி. நகரைச் சேர்ந்த பாலா (எ) பரத் மணிகண்டன் உள்ளிட்ட சிலர் தன்னை குடிபோதையில் தாக்கியதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார். இப்புகார் தொடர்பாக காவல் துறையினர், பரத், மணிகண்டன் உள்ளிட்ட மூவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது. 17-3-2022 அன்று அதிகாலை கேலக்சி திரையரங்கம் அருகே ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் சி.எம்.சி. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென ஆட்டோவில் ஏறியபோது, அவர்களைத் தனியிடத்திற்கு அழைத்துச்சென்று பரத், சந்தோஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஐவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவருடன் இருந்த ஆண் நபரை ஏ.டி.எம். க்கு அழைத்துச்சென்று, சுமார் 40 ஆயிரம் ரூபாயைப் பறித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


மேலும், விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்பதும், ஆண் நபர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் நாக்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அவரது சொந்த மாநிலத்திற்குச் சென்றுள்ள நிலையில் நேற்று (22-3-2022) இணையவழி வாயிலாக அளித்த புகாரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 127/2022, இ.தச பிரிவுகள் 147, 148, 342, 365, 368, 376 (D) 376 (E), 395, 397, 506 (ii) உடன் இணைந்த பிரிவு 4-தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பரத் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.