தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70-வது ஆண்டு பவள விழா வரும் 23-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பவள விழாக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் தலைவர் ஆனந்த் மொராயிஸ் கூறும்போது, தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கம் கடந்த 1952 ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 70 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கப்பல் முகவர்களின் நலனுக்காகவும், தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கப்பல் மாலுமிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து, ஏற்றுமதி, இறக்குமதி தொழில் பாதிப்படையாமல் இருக்க உதவி செய்து உள்ளதாக கூறிய அவர், வரும் 23 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள தனியார் அரங்கில் 70-வது ஆண்டு பவள விழா நடைபெற உள்ளது.இதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தூத்துக்குடி துறைமுகம் நல்ல முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. துறைமுகத்தில் ரூ.7500 கோடிக்கு வெளித்துறைமுக விரிவாக்க பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி- மதுரை தொழில்வழித்தட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடையும் போது தூத்துக்குடி நகரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கப்பல் முகவர்களுக்கு 25 சதவீதம் அளவுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
விழாக் குழு ஆலோசகரும், தூத்துக்குடி கப்பல் முகவர் மற்றும் சரக்கு கையாளும் நிறுவனத்தை சேர்ந்தவருமான ஜோ வில்லவராயர் கூறும்போது, தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இன்னும் 5 ஆண்டுகளில் தூத்துக்குடி நகரம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது தொடர்பாக எதுவும் கூற விரும்பவில்லை. இந்த விசயத்தில் அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் தூத்துக்குடிக்கு எந்த தொழிற்சாலை வந்தாலும் சிலர் திட்டமிட்டு எதிர்க்கிறார்கள். இதனால் தூத்துக்குடியில் வரவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை போன்றவை வரமுடியவில்லை. எந்த தொழிற்சாலை வந்தாலும் திட்டமிட்டு எதிர்ப்பவர்களை அரசு அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுச்சூழல் மாசு இல்லாத தொழிற்சாலைகள் தூத்துக்குடிக்கு வரவேண்டும். தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. எனவே, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தொழிற்சாலைகள் செயல்பட இயலும். சுற்றுச்சூழல் விசயத்தில் சமரசம் செய்யாமல் தொழிற்சாலைகளை அனுமதிக்க வேண்டும் என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்