விஜய் டிவியின் பிரபலமான சீரியல்களின் ஒன்று பாரதி கண்ணம்மா. ஒரு கர்ப்பணி பெண் நடையாய் நடந்ததை ட்ரெண்ட் ஆக்கி, கொண்டாடி தீர்க்கும் அளவிற்கு பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம். அழகு குறைந்த பெண் ஒருவரை மணந்து கொள்ளும் டாக்டர். டாக்டரை காதலிக்கும் சக தோழி. டாக்டர் வேறொருவரை திருமணம் செய்ததால், அந்த வாழ்க்கையை கெடுத்து, தனதாக்க துடிக்கும் அந்த தோழியும், அதற்கு உடன்பட்டு வாழ்க்கை தொலைக்கும் டாக்டரும் தான் கதை. அழகு குறைந்த மனைவியாக காட்டப்படும் கண்ணம்மா கதாபாத்திரம் தான், ஹீரோ, ஹீரோயின் எல்லாமே. 


கிட்டத்தட்ட 900 எபிசோடுகளை கடந்து ஆயிரமாவது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவாக நடித்த ரோஸ்லின் மாறி, புதிய கண்ணம்மா கூட வந்துவிட்டார். அந்த அளவிற்கு நீண்ட தொடராக நகர்ந்து கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா.






கிராமம், நகரம், அப்புறம் நகரம் கிராமம் என நகர்ந்து கொண்டிருக்கும் கதையில், இப்போது நகரில் உள்ள மருத்துவமனையில் கண்ணம்மா அவரது குழந்தைகள் உள்ளிட்டோர் இருக்க, மருத்துவமனையை தீவிரவாதிகள் ‛ஹைஜாக்’ செய்து விட்டார்கள். எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே... சமீபத்தில் பீஸ்ட் படத்தின் தாக்கம் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். அதே பார்மட்டில் ஹைஜாக் செய்யப்படுகிறது மருத்துவமனை.


என்ன ஒரு வித்யாசம், இங்கு விஜய் இல்லை... அவருக்கு பதிலாக கண்ணம்மா, பீஸ்ட்டாக மாறி, தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டிக் கொண்டிருக்கிறார். இது ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, பீஸ்ட் படம் மட்டும் இருந்தால் அஜித் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என நினைத்தார்களோ என்னவோ, அஜய் ரத்தினம் தலைமையில் ஒரு பிளாக் டாக் படையை இறக்கி, விவேக் படத்தின் காட்சிகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். 






ஒரே நேரத்தில் விஜய்-அஜித் படங்களை கலந்து பீஸ்ட் மிக்ஸ்ட் விவேகம் படத்தை காட்டிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். அது கூட பரவாயில்லை, ஆக்ஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, ‛Get ready boys...’ என்று கேப்ஷன் வேற போட்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் தொடங்கிய கதை, இப்போது, பீஸ்ட், விவேகத்தில் வந்து நிற்கிறது. இன்னும் விக்ரம், சீதா ராமம் எல்லாம் பாக்கி இருக்கிறது. அதெல்லாம் எப்போ வருமோ என்கிற அதிர்ச்சியில் அடுத்தடுத்த ப்ரமோவை எதிர்பார்த்து காத்திருக்கிறது சீரியல் விரும்பிகள் படை!