மணப்பெண் என்பவள் பெரும்பாலும் நாணத்தோடும், அடக்கத்தோடு தொடர்புப்படுத்தப்படுவர். இந்தியாவில் மணப்பெண்கள் பெரும்பாலும் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப திருமண நாளைக் கடைப்பிடிக்க முடியாது. தங்களுக்குப் பிடித்த உடை, பிடித்த இடம் முதலான எதையும் தேர்வு செய்யும் உரிமை பெரும்பாலான மணப்பெண்களுக்குக் கிடையாது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெடுல் பகுதியில் காரில் வராமல், தானே டிராக்டர் ஒன்றை ஓட்டி வந்து, தன் திருமண நிகழ்ச்சியில் மாஸ் காட்டியிருக்கிறார் பெண் ஒருவர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், மணப்பெண் பாரதி டார்கே என்பவர் கறுப்பு நிறக் கண்ணாடி அணிந்து, வழக்கத்திற்கு மாறாக டிராக்டர் ஒன்றை ஓட்டி தனது திருமண நிகழ்ச்சிக்கு எண்ட்ரீ கொடுத்துள்ளார். அவரது இரண்டு சகோதரர்கள் அவருடன் அந்த வீடியோவில் இருக்கின்றனர். இந்த எண்ட்ரீ அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் போலான மாநிலங்களில் பெரும்பாலும் மணமகன்கள் காரிலோ, குதிரையிலோ திருமணத்திற்கு வருவது வழக்கம். எனினும், ஒரு பெண் தானாக டிராக்டர் ஓட்டி வருவது மிக அரிதான நிகழ்வு. இப்படியான சமூகக் கட்டமைப்புகளைத் தகர்த்து தன் திருமண நிகழ்ச்சியை வைரலாக மாற்றியிருக்கிறார் பாரதி டார்கே.
பாரதி டார்கே ஓட்டி வந்தது மஹிந்திரா ஸ்வராஜ் கார் என்பதால் ஆனந்த் மஹிந்திரா இந்த வைரல் வீடியோ குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். பொறியியலாளரான பாரதி டார்கே கடந்த மே 25 அன்று வாசு கவட்கர் என்பரைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட வீடியோவில் தனது கருத்தைப் பகிர்ந்து ரீட்வீட் செய்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. மஹிந்திரா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்குபவர். தன்னைக் குறித்தும், தன் நிறுவனத்தைச் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் வெளிவரும் பதிவுகளுக்கு பதில் எழுதும் வழக்கம் கொண்டவரான ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவுக்கு, `பாரதி என்ற பெயர் கொண்ட மணப்பெண், ஸ்வராஜ் வாகனத்தை ஓட்டுகிறார்.. இது அர்த்தம் தருவதாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
தன் திருமணத்தைத் தனக்கு பிடித்தவாறு அனுசரிக்க விரும்புவோருக்கு இந்த நிகழ்வு முன்னுதாரணமாக அமையும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்