பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் அண்மையில் பாமக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தமிழக அரசியல் சூழல், அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல், அண்ணாமலையின் அரசியல், ஐபேக், அணி தாவல் விமர்சனம், சாதிக்கட்சி பழி உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து அன்புமணி, ’ஏபிபி நாடு’விடம் விரிவாகப் பேசினார்.
''பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கிறது?
அண்ணாமலை காவல் துறையின் தொப்பியைக் கழற்றிவிட்டு, அரசியல் தொப்பியை அவர் போட வேண்டும். காவல்துறை கண்ணோட்டத்திலேயே அவர் மக்களையும் அரசியலையும் பார்க்கிறார்.
ஆனால், அண்ணாமலைக்குக் கூடும் மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதே? ஆட்சியைப் பிடிப்போம். 25 எம்எல்ஏக்களை உருவாக்குவோம் என்றெல்லாம் சொல்கிறார்... அண்ணாமலையின் பணியை ஒரு கட்சியின் தலைவராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
அது அவரின் கடமை. அண்ணாமலைக்கு என்னுடைய வாழ்த்துகள். அவரின் வேலையை அவர் செய்துகொண்டிருக்கிறார். எல்லாக் கட்சிகளுக்கும் அதுதான் அவசியம்.
2 திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளாரே...
யார் தவறு செய்தாலும், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் முதலில் குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் பட்டியலை வெளியிடுவது பெரிதில்லை. உண்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்துவிட்டதா? செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளதே?
இது அந்த இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள பிரச்சினை. அதுகுறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை.
பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், திமுக உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சிகளுக்கும் தேசியக் கட்சிகளுக்கும் அரசியல் ஆலோசனைகளை அளித்து வருகிறது. வருங்காலத்தில் நீங்கள் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவீர்களா?
எங்களிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லை. எனினும் எங்களிடம் ஏராளமான இளைஞர்கள் உள்ளார்கள். அவர்களை நல்வழிப்படுத்தத் திட்டங்களை வைத்திருக்கிறோம். பாமக 2.0 செயல்திட்டத்தில் விரைவில் வெற்றி பெறுவோம்.
மாற்றம், முன்னேற்றம், அன்புமணி... முதல் நாள் முதல் கையெழுத்து போன்ற விவகாரங்களைப் பேசினோம். ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் கூட்டணியுடன் மட்டுமே தேர்தலைச் சந்திக்கிறது பாமக என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இது எங்கள் மீது தொடர்ந்து வைக்கப்படுகிற விமர்சனம். இதில் உண்மை கிடையாது. 2016-ல் தனித்துப் போட்டியிட்டோம். எங்களின் பிரச்சாரம் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. அன்று வேறு அரசியல் சூழல் இருந்தது. கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர். இப்பொழுது அந்த சூழல் இல்லை. களம் நன்றாக இருக்கிறது. இப்போது எங்களின் பிரச்சாரமும் வியூகங்களும் தேர்தலில் வெற்றிபெறும் என்று நம்புகிறேன்.
55 ஆண்டுகாலம் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டது போதும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த வகையில் 2026-ல் பாமக ஆட்சி நடைபெறும். நடைபெற வேண்டும்.
2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடுவீர்களா?
அடுத்த 15 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. கூட்டணி தேவைப்படும்.
திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆளாது என்றால், உங்களைத் தலைமையாகக் கொண்டு திராவிடக் கட்சிகள் கூட்டணியில் இணையுமா?
எங்களின் நோக்கம் தமிழகத்தை வளர்ப்பதுதான். ஒருமித்த கருத்துக்கொண்ட அமைப்புகள் எங்கள் அணிக்குள் வந்தால், நிச்சயம் ஏற்றுக்கொள்வோம். எங்களின் கொள்கை, வளர்ச்சித் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மதுவிலக்கு, போதைப் பழக்கம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு ஆதரவான கட்சிகள் எங்களுடன் இணையலாம்.
கல்வி, மதுவிலக்கு, சுகாதாரம், வேளாண்மை சார்ந்து தொடர்ந்து பேசியும் செயலாற்றியும் வருகிறீர்கள். ஆனால் அவை வாக்கு வங்கி அரசியலில் எதிரொலிப்பது இல்லையே?
அதை நாங்கள் செய்ய வைப்போம். வாக்கு வங்கி இலவசத்தைச் சார்ந்துதான் இருக்கிறது. முன்னேற்றத்தைச் சார்ந்து இருப்பதில்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சாதி, மதம், இனம், மொழியை வைத்தே மக்களைப் பிரித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் வளர்ச்சியின் அடிப்படையில் மக்களைச் சேர்ப்பதுதான் எங்களின் நோக்கம்.
பாமக மீதும் சாதிக் கட்சி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?
அது எங்கள் மீது திணிக்கப்பட்ட விமர்சனம். அதில் உண்மை இல்லை. கட்சி தொடங்கி 33 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளாக இல்லாத பழி, இப்போது சுமத்தப்பட்டிருக்கிறது. முதலில் நன்றாக இருந்து, இப்போது மாறிவிட்டோமா? குறுகிய கண்ணோட்டத்தில் எங்களின் செயல்பாடுகள் இருக்காது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஓராண்டு காலத் திமுக ஆட்சி எப்படி இருக்கிறது?
முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அந்தக் கண்ணோட்டத்தில் இருப்பதாக நான் கருதவில்லை. திமுக ஆட்சி கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி, அதில் வெற்றியும் பெற்றது. கொரோனா மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
திமுக அரசுக்கு பிரதான எதிர்க் கட்சியாக பாஜகதான் செயல்படுகிறது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வீரியத்துடன் செயலாற்றவில்லை என்று கூறப்படுகிறதே?
அதில் உண்மையில்லை. கடந்த சில ஆண்டுகளாக நான் எங்கு பார்த்தாலும் கேட்கும் வார்த்தைகள் கோயில், மசூதி.. கோயில், மசூதி. இதில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வேளாண்மை, நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்து எங்குமே நான் கேட்கவில்லை.
இந்த மாதிரியான விஷயங்களை வைத்து பாஜக வளர்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?
நான் பாஜகவைப் பற்றிப் பேசவில்லை. பொதுவாகத்தான் சொல்கிறேன். தொலைக்காட்சியை ஆன் செய்தாலே, கோயில், மசூதி குறித்த செய்திகள்தான் அதிகம் வெளியாகின்றன. கல்வி பற்றியோ, மது, ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் விளைவுகள், தடுக்கும் முறைகள் குறித்துப் பார்க்கவே முடிவதில்லை. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பார்வையைத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். ஆனால் இதில் நீடித்த வளர்ச்சி இருக்காது''.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.