அதிமுகவில் இரட்டை தலைமை தான் நீடிக்கிறது. திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி.

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு உபகரணங்களான முகக் கவசம், கிருமிநாசினி, ஆக்சிஜன் கன்வர்ட்டர், உள்ளிட்ட பொருட்களை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ் மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியதாவது..

 

தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. இருந்த போதிலும் கடந்த கொரோனா முதல் அலையின்போது 6900 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தோம். அரசு கூடுதலாக கவனம் செலுத்தி கொரோனா தொற்றை குறைக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் கிராமப்புற பகுதிகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களும், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்தி கொரோனா தொற்றை குறைக்க வேண்டும். கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. கொரோனா பரிசோதனையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். பல இடங்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். 

 

குறுவை சாகுபடிக்காக கல்லணை இன்று திறக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்தி இந்த மாதம் 9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றிட வேண்டும். தற்போது வரை ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. எனவே தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை ஆணையத்திடம் வலியுறுத்தி தமிழக அரசு பெற வேண்டும். அப்போது தான் கடைமடை வரை தண்ணீரை கொண்டு சென்று குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். குறுவை சாகுபடியை சிறப்பாக செய்ய வேண்டுமென்றால் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும். மழைக்காலம் தொடங்குகிற வரை முறை வைக்காமல் அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும். அப்போதுதான் முழுமையாக குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். அதேபோல விவசாயிகளுக்கு தேவையான விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடு பொருட்களையும் வேளாண் சார்ந்த இயந்திரங்களையும் தயார் நிலையில் அரசு வைத்திருக்க வேண்டும். தற்போது வேளாண் தொழில் இல்லாத மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து இயந்திரம் சார்ந்த பொருட்களையும் கொண்டுவந்து குறுவை சாகுபடியை மேற்கொள்ள வேண்டும்.



 

கட்சியை விட்டு நீக்கிய விரக்தியில் புகழேந்தி அதிமுகவில் ஒற்றை தலைமை தான் என்ற ரீதியில் பேசி வருகிறார். ஆனால் அதிமுகவில் இரட்டை தலைமை தான் நீடித்து வருகிறது. அதிமுக வலுவான நிலையில் உள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று 40 நாட்கள் ஆகிறது. அரசிடம் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் போது அதனை பாராட்டுவோம், வரவேற்போம். நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதனை விமர்சனம் செய்வோம். அரசு பொறுப்பேற்று 40 நாட்களே ஆகிறது, ஆகையால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அதைப் பற்றி விமர்சனம் செய்வோம்.

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சித்த மருத்துவம் தேவை. சித்த மருத்துவம் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. தொற்று வந்துவிட்டாலோ அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டால் ஆங்கில முறை மருத்துவத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கிறது. தொற்று ஏற்படுவதற்கு முன்னால் சித்த மருத்துவம் தேவைப்படுகிறது. எனவே சித்த மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவ முறைகளை முழுமையாக கையில் எடுத்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.