கேரள பாப் பாடகரான ஹிராந்தாஸ் முரளி மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். வேடன் என்று அழைக்கப்படும் பாப் பாடகரான ஹிராந்தாஸ் ஜாதிக்கு எதிரான பாடல்கள் மூலம் பிரபலமானவர். அவர் மீது சில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தங்களது சமூக வலைதள பக்கங்களில் கடந்த வாரம் தெரிவித்தனர். முதலில் குற்றச்சாட்டுகளை மறுத்த வேடன், பின்னர் பேஸ்புக் பதிவு மூலம் மன்னிப்பு கோரினார். தவறை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள தயார் என்றும், தன்னால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.




ஆனால் அவர் தன்னுடைய தவறை வெளிப்படையாக ஏற்காமல், பூசி முழுகி மன்னிப்பு கேட்டதாக பலரும் குற்றம் சாட்டினர். அவருடைய மன்னிப்புக்கே கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அவருடைய மன்னிப்பு பதிவை கேரள நடிகை பார்வதி லைக் செய்திருந்தார். அதற்கும் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். ஒரு பிரச்னை என்றால் நியாயத்திற்காக குரல் கொடுக்கும் பார்வதி ஒரு பாலியல் குற்றவாளியை ஆதரிப்பதா என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் பார்வதி.


தனக்கென தனி ரசிகர் கூட்டம்... ரீலோ.. ரியலோ.. மாஸ் காட்டும் பார்வதி!


இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், குற்றம் சாட்டப்பட்ட பாடகர் வேடனுக்கு எதிராக மிகவும் தைரியமாக பேசியவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவரது மன்னிப்பு பதிவை நான் லைக் செய்தேன். பல ஆண்கள் தாங்கள் தவறு செய்ததாக கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள், அதற்காகத்தான் அதனை நான் லைக் செய்தேன்.  இது கொண்டாட வேண்டிய ஒன்றல்ல என்பதை நான் தெளிவாக அறிவேன். இருப்பினும், அவரின் மன்னிப்பு நேர்மையானதாக இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறியவுடன் நான் எனது “லைக்” ஐ நீக்கிவிட்டேன்.  நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவே நிற்பேன். எனது செயலால் யாரேனும் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 




மலையாளத்தில்  முன்னணி நாயகியான பார்வதி தமிழில் பூ படத்தில் அறிமுகம் ஆனால். பின்னர் மரியான், உத்தமவில்லன், சென்னையில் ஒருநாள், பெங்களூரு நாட்கள்  உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.


மம்முட்டி நடித்து வெளியான ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது, பார்வதி மேனன் என்ற பெயரில் இருந்த சாதி எனக்கு வேண்டாமென்று பெயரை பார்வதி என மாற்றியது போன்ற பல செயல்களால் கவனிக்க வைத்தவரும் இவர் தான். சமீபத்தில், மலையாளத்தின் உயரிய விருதான ஓஎன்வி விருது பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எப்படி பரிந்துரைக்கப்பட்டது என வைரமுத்துவுக்கு எதிராக அரசை சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.