மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை இன்று மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா ஐ.எப்.எஸ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், யானைகள் ஆராய்ச்சி மாவட்டக்குழு உறுப்பினர் சிவகணேஷ், வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். 





ஆய்வின் போது யானையின் கண், தோல், பாதம், யானையின் வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றை கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் யானையை நடக்க வைத்து பரிசோதித்த அதிகாரிகள், யானைக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி யானைப்பாகன் செந்திலிடம் கேட்டறிந்தனர். அப்போது, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.




மயிலாடுதுறையில் நகராட்சிக்கு சொத்து வரி, காலி மனை வரி உள்ளிட்ட வரிகளை அதிக அளவில் நிலுவையில் வைத்துள்ளவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.  இந்த நகராட்சியின் சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல்வேறு இனங்களில் மொத்தம் 8  கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனால் பாதாள சாக்கடை சீரமைப்பு, சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு நகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சிக்கு சொத்து வரி, காலிமனை வரி உள்ளிட்ட வரிகளை அதிக அளவில் நிலுவையில் வைத்துள்ளவர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 




நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த நகராட்சி அதிகாரிகள் நிலுவையின்றி வரிகளை செலுத்த அறிவுறுத்தினர்.




தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் பயிலும் 760 மாணவ மாணவிகளுக்கு புதுவருட பிறப்பை அடுத்து நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சியை தருமபுரம் ஆதீனம் துவக்கி வைத்தார். 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த ஆதீன சைவ திருமடம் அமைந்துள்ளது. ஆதீனத்திற்கு சொந்தமான அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி ஆதீன வளாகத்தில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் 760 மாணவ மாணவிகளுக்கு 2023 -ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சி ஆதீன மடத்தில் நடைபெற்றது. மாணவ மாணவிகளுக்கு நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சியை தருமபுரம் 27 -வது குரு மகா சன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரிய சுவாமிகள் துவக்கி வைத்தார்.




இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு நாள்காட்டிகள் வழங்கப்பட்டன. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மயிலாடுதுறையில் அமைந்துள்ள புகழ்பெற்ற குமரக்கட்டளை வள்ளி தேவசேனை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற மார்ச் 24 ம் தேதி (24.03.2023) அன்று நடைபெறும் என்றும், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறினார்.