சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு விருத்தாச்சலம் வழியே தினசரி எக்ஸ்பிரஸ் (22153, 22154) இருமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. சேலம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி இரவு புறப்படும் இந்த ரயில், சேலம் டவுன், வாழப்பாடி கேட், ஆத்தூர், சின்னசேலம், விருத்தாச்சலம் வழியே செல்கிறது. இதில், வாழப்பாடி கேட் ரயில் நிலையத்தில், இரு மார்க்கத்திலும் ஒரு நிமிடம் மட்டும் ரயில் நிற்கும். அந்த நேரத்திற்குள் ரயிலில் இருக்கும் பயணிகள் இறங்கவும், ஏறும் பயணிகள் ஏறவும் செய்திட வேண்டும். மிக விரைவாக (1 நிமிடத்தில்) ரயில் புறப்படுவதால், பயணிகள் அவசர அவசரமாக இறங்கி, ஏற வேண்டியிருந்தது. இதனால், வாழப்பாடி கேட் ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் ரயில் நின்றுச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கைகயை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, இன்று (17ம் தேதி) முதல் வாழப்பாடி கேட் ரயில் நிலையத்தில் சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் கூடுதலாக ஒரு நிமிடம், அதாவது 2 நிமிடம் நின்று செல்லும் என அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் (22153) இன்று முதல் அதிகாலை 5:08 மணிக்கு வந்து 5:10 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில், சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22154) இன்று முதல் இரவு 10:08 மணிக்கு வந்து இரவு 10:10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



சேலம் வழியே இயக்கப்படும் ஹுப்ளி-ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில், பண்டிகை கால கூட்டநெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்களை, ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. இந்த வகையில், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம் வழியே ராமேஸ்வரத்திற்கு. வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (07355, 07356) இருமார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் இயக்க காலம், நடப்பு மாத இறுதியோடு முடிவடைய இருந்த நிலையில், வரும் மார்ச் மாதம் வரை நீட்டித்து இயக்கப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதன்படி, ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு:கட்டண சிறப்பு ரயில் (07355) வரும் ஜனவரி 7, 14, 21, 28, பிப்ரவரி 4, 11, 18, 25, மார்ச் 4, 11, 18, 25 ஆம் தேதிகளில் (சனிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. ஹூப்ளியில் காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ராமேஸ்வரத்திற்கு அடுத்தநாள் காலை 6:15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், ராமேஸ்வரம்-ஹுப்ளி வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (07356) வரும் ஜனவரி 8, 15, 22, 29, பிப்ரவரி 5, 12, 19, 26, மார்ச் 5, 12, 19, 26 ஆம் தேதிகளில் (ஞாயிறு தோறும்) இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம் வழியே ஹுப் ளிக்கு அடுத்தநாள் இரவு 7:25 மணிக்கு சென்றடைகி றது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.