ஸ்டண்டுகளுக்கும் சாகசங்களுக்கும் பேர் போன ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் கடந்த 1986 ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் டாப்கன். இந்தப்படத்தின் இராண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் டாப்கன் மேவ்ரிக்.
ஆரம்ப காட்சியிலே புதிய ப்ளேன் ஒன்றை அநாசியமாக ஓட்டும் டாம், அந்த ப்ளேனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் லிமிட்டை தாண்டி அதனை இயக்கி விடுகிறார். இதனால் அந்தரந்திலேயே அந்த ப்ளேன் வெடித்து சிதற, அதற்கு தண்டனையாக அவர் டாப்கன் எனப்படும் போர் விமானிகளை இயக்கும் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்படுகிறார். அங்கு அவருக்கு அபாயகரமான இலக்கு ஒன்று கொடுக்கப்படுகிறது.
அதனை செய்து முடிக்க, அவருக்கு பயிற்சி பள்ளியில் இருக்கும் பெஸ்ட் பைலட்கள் கொடுக்கப்படுகிறார்கள். அதில் இறந்துபோன தனது நண்பனின் மகனும் இருக்கிறான். இந்த பைலட்களை வைத்து டாம் அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்கை செய்து முடித்தாரா இல்லையா என்பதே டாப் கன் மேவ்ரிக்கின் கதை.
துவம்சம் செய்த டாம்
டாப் கன்னில் இருந்த டாம் க்ரூஸின் சாகசம் டாப் கன் மேவ்ரிக்கிலும் தொடர்ந்திருக்கிறது. ப்ளேனை வைத்து டாம் அந்தரத்தில் செய்யும் சாகசங்களாகட்டும், கவாஸ்கி பைக்கை முறுக்கி ஸ்பீடு ஏற்றும் காட்சிகளாட்டும், நண்பன் தன்னால் இறந்துவிட்டானே என்ற குற்ற உணர்ச்சியுடன் அவர் காட்டும் கன்ட்ரோல் எமோஷனாகட்டும், இனி ஒன்றுமே செய்ய முடியாது என்ற கட்டத்தில்.. கண்ணா 5 கிரகங்களிலும் உச்சம் பெற்ற டாம்.. எதையும் செய்வான் என நிரூபிக்கும் காட்சிகளாட்டும் எல்லாவற்றிலும் டாமுக்கே உரித்தான முத்திரை.
படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஆகாயத்தில்தான் நடக்கிறது. அதனால் இதில் கேமராமேன் கிளாடியோ மிராண்டாவுக்கு எக்கச்சக்க வேலை. ஆனால் அதையெல்லாம் கனகச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கேமரா மேன் கிளாடியோ மிராண்டா. அதே போல எடி ஹாமில்டனின் எடிட்டிங்கும் நம்மை ஃப்ரேம் ஃப்ரேம் பை ரசிக்க வைக்கிறது. பிண்ணனி இசை பல இடங்களில் அபாரமாக வொர்க் அவுட் ஆகியிருந்தாலும், சில இடங்களில் அவற்றில் இருக்கும் குறை, காட்சிகளை ரசிக்கவைப்பதற்கு பதிலாக நெழிய வைத்து விடுகிறது.
முதல் பாதி அப்படி இப்படி இருந்தாலும், இராண்டாம் பாதி ஜெட் வேகத்தில் செல்கிறது. குறிப்பாக கடைசி அரை மணி நேரம் சஸ்பென்ஸின் உச்சியில் உக்காரவைத்துவிடுகிறது டாம் மற்றும் குழுவின் சாகசங்கள். பார்த்து பழகிய பழைய பஞ்சாங்க கதை என்றாலும் டாமின் சாகசங்களுக்காக டாப்கன் மேவ்ரிக்கை ரசிக்கலாம்.