Thiruchitrambalam Review: ரசிகர்களின் ஒன்றரை வருட காத்திருப்புக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
சின்ன அலட்சியம் காரணமாக நிகழ்ந்த விபத்தில் அம்மாவையும், தங்கையையும் இழந்த தனுஷ் அந்த விபத்துக்கு அப்பாவான பிரகாஷ்ராஜே காரணம் என்று நினைத்து, அவருடன் வருடக்கணக்கில் பேசாமல் இருக்கிறார். தனுஷூக்கு ஆதரவாக அவரது தாத்தாவான பாரதிராஜாவும், தோழியான நித்யா மேனனும் இருக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென பிரகாஷ்ராஜ்ஜிற்கு பக்கவாதம் வந்துவிட, அப்பாவுக்கு உற்ற துணைவனாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார் தனுஷ்(Dhanush). அதன்பின்னர், அப்பாவுக்கும் பிள்ளைக்குமான உறவு என்ன ஆனது, இதனிடையே ராஷிகண்ணா மீதும், பிரியாபவானி ஷங்கர் மீதும் தனுஷிற்கு முளைத்த காதல் கரை சேர்ந்ததா? நித்யா மேனனின் ரோல் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.
வேலைஇல்லா பட்டதாரி ரகுவரனை மீண்டும் திருச்சிற்றம்பலத்தில் கொண்டு வந்திருக்கிறார் தனுஷ். வழக்கம் போல காமெடியில் பவுண்டரியும், எமோஷனில் சிக்ஸரும் அடித்து பட்டையை கிளப்புகிறார். பாரதிராஜாவுக்கும் அவருக்குமான காட்சிகள் தியேட்டரில் அப்லாஸை அள்ளுகிறது. வில்லத்தனத்தில் விளையாடிக்கொண்டிருந்த பிரகாஷ்ராஜிற்கு இந்தப்படத்தில் எமோஷனில் விளையாடுவதற்கான வாய்ப்பு. பின்னி பெடல் எடுக்கிறார்.
ஆனால் இவர்கள் எல்லோருக்கும் படத்தில் சிம்ம சொப்பனமாக இருப்பது நடிகை நித்யா மேனன். தனுஷுடன் தோழியாக அவர் வரும் காட்சிகள் நம்மை ரசிக்க வைப்பதை தாண்டி,நம்மை ஒரு எமோஷன் ஸோனுக்குள் அழைத்துசென்றுவிடுகிறது. அந்த எமோஷன்தான் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அந்தளவு அந்தக்கதபாத்திரத்திற்கு உண்மையை சேர்ந்து இருக்கிறார் நித்யா.
தன் மீது தனுஷ் வைத்த நம்பிக்கைக்கு, குட்டி, உத்தமபுத்திரனில் தனுஷிற்கு செய்யத்தவறியதை ஜவஹர் திருச்சிற்றம்பலத்தில் செய்துவிட்டார். இன்றைய காலக்கட்டத்தில், ஆடியன்ஸூக்கு ஒரு படமானது நொடிக்கு நொடி சுவாரஸ்சியம் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதன் காரணமாக ஆக்சனை நோக்கி இளம் இயக்குநர்கள் படையெடுத்து கொண்டிருக்க, அப்படியெல்லாம் இல்லை, சாமனியனுக்கான வாழ்வில் நடக்கும் சின்ன விஷயங்களை கூட சுவாரசியத்தோ சொல்ல முடியும் என்று நிருபித்து இருக்கிறார் ஜவஹர்.
மற்றக்கதாபாத்திரங்களை திறம்பட கையாண்ட அவர், ராஷிக்கண்ணா மற்றும் பிரியாபவானி ஷங்கர் ஆகியோரின் கதாபாத்திரத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏமாற்றம் அளித்தது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு அபாரம். அடுக்குமாடி குடியுருப்பு, சாலை, கிராமம்தான் உள்ளிட்டவைகள்தான் லொக்கேஷன்ஸ்.
இவ்வளவு லிமிட்டான ஸ்பேசில் கூட என் கேமராவால் பேச முடியும் என நிருபித்துக்காட்டியிருக்கிறார். வழக்கம் போல எல்லா பாடல்களையும் ரசிக்கும் வைக்கும் கொடுத்த அனிருத் பிண்ணனி இசையில் மீண்டும் தனது முத்திரையை பதித்து விட்டார். ஒன்றரை வருடத்திற்கு பிறகு தனுஷின் படம் திரைக்கு வருகிறது. அதனால், ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், அதிரடி என எதிர்பார்ப்பு என வந்த ரசிகர்களுக்கு இல்ல அது அந்த மாதிரி படம் இல்ல என்று சொன்னது ஒரு சின்ன ஏமாற்றமாக எங்கோ இருக்கத்தான் செய்கிறது.