ராஜ் பி ஷெட்டி எழுதி இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ஸ்வாதி முத்தினெ மலெ ஹனியே. சிரி ரவிகுமார் , சூர்யா வசிஷ்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். திரையரங்கத்தைத் தொடர்ந்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் பெற்று வரும் இந்தப் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.




ஸ்வாதி முத்தினெ மலெ ஹனியே



மரணம் ஒவ்வொரு மனிதனின் இறுதி இலக்கு. எல்லா மனிதர்களும் ஒரு நாள் இறக்கதான் போகிறார்கள். நமக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், காதலித்தவர்கள் எல்லாரும். அந்த தருணத்தில் நம மனதில் இருக்கும் ஆற்றாமையை எதுவாலும் சரி செய்யாமல் போய்விடலாம். ஆனால் அதற்காக வாழ்க்கையை வாழாமல் இருக்க முடியுமா. சிரிக்காமல், அழாமல், காதலிக்காமல், காதலில் தோல்வியடையாமல் , பேசாமல், கோபத்தைக் வெளிப்படுத்தாமல் எல்லாம் இருக்க முடியாதில்லையா. மரணத்திற்கு முன்பாகவே உணர்வுகள் இறந்துபோன கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கிறது ஸ்வாதி முத்தினெ மலெ ஹனியே .

இன்னும் கொஞ்ச காலத்தில் ஏதோ ஒரு நோயினால் மரணத்தை தழுவப்போகும் நோயாளிகள் தங்குவதற்காக ஒரு பராமரிப்பு இடம். அதில் மரணத்தின் மேல் இருக்கும் பயத்தால், வலியால் துடிக்கும் நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குபவராக இருக்கிறார் பிரேரனா ( சிரி ரவிகுமார்). இந்த வேலையை தொடங்கும்போது எவ்வளவு உணர்ச்சிகரமானவராக இருந்தாரோ அது எல்லாம் மறைந்து இறுகிப்போன ஒருவராக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். சோகம், இன்பம், துன்பம், துரோகம் , மரணம் எது நடந்தாலும் அதை ஏற்றுகொள்வது மட்டுமே நான் செய்யவேண்டியது என்கிற நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டார். தன்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார் என்று தெரிந்தும் அதைப் பற்றி என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை. அதே மருத்துவமனையில் தினம் தினம் யாரோ ஒருவர் இறந்துபோவதை பார்த்து நன்றாக குடித்துவிட்டு போதையில் யாரிடமும் பேசாமல் இருக்கிறார் பிரபாகரன் என்பவர்.





இப்படியான நிலையில் இந்த தங்குமிடத்திற்கு எந்த வித அடையாளமும் இல்லாமல் வந்து சேர்கிறார் அனிகேத் (ராஜ் பி ஷெட்டி). வயிற்றில் புற்றுநொயால் பாதிக்கப்பட்ட அனிகேத்தின் நடத்தைகள் பிரேரனாவை கவர்கின்றன. இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இறக்கப்போகும் அனிகேத் இந்த மனிதர்களின் வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறார் என்பதே ஸ்வாதி முத்தினெ மலெ ஹனியே.

ஒரு காட்சியில் அனிகேத் இடம் அவன் பேரில் ஒரு மரக்கன்றை நட்டு வைக்க சொல்கிறார்கள். அனிகேத் நந்தியாவட்டம் செடியை தேர்வு செய்கிறான். அது ஒரு சாதாரணமான பூ. குப்பை போல் என் வீட்டில் தினமும் கொட்டும். அதை ஏன் தேர்வு செய்தாய் என்று பிரேரனா கேட்கையில் அவன் கூறும் பதில் இதுதான்.





" அதுதான் என்னுடைய நோக்கமும்
அதை ஒரு குப்பையாக நினைத்துக் கொள்வது.
அது ஒரு மிக சாதாரணமான செடி
நாம் அதை கொண்டாடா விட்டாலும் அது மலரும்.
கடவுளின் பாதங்களுக்கு செல்லாவிட்டாலும் அது மலரும்.
யாரும் அதை வைத்து கவிதைகள் எழுதாவிட்டாலும் அது மலரும்
நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் போனாலும் அது மலரும்
அது யாருக்காகவும் மலர்வதில்லை
அது தனக்காகவே மலர்கிறது
அது உயிருடன் இருப்பதே அது மலர்வதற்கு போதுமான காரணம்.
அது சுதந்திரமாக இருக்கிறது
அதனால் அது மலர்கிறது.





மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதன் வாழ்க்கையின் சாதாரணத்துவத்தைக் இப்படி கொண்டாடுகிறான். மிக அனாயாசமாக அலட்டிக்கொள்ளாமல் பல பிரம்மாண்டமான தருணங்களை கவித்துவமாக, குறு வசனங்களில் கச்சிதமாக வெளிப்படுத்திவிடுகிறார் ராஜ் பி ஷெட்டி. கதையின் போக்கில் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் அவர்களின் பின்னணி இணைக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.





பிரேரனா தனது அம்மாவிடம் தான் இன்னொருவரை காதலிப்பதாக கூறும் காட்சி, தனது கணவனை ஒரு சிறு புன்னகையால் எதிர்கொள்வது, ஒரு நாயினத்தை பற்றி அனிகேத் சொல்லும் கதை என உணர்ச்சிகள் மேலோங்காமல் இந்த காட்சிகள் உணர்த்தும் உண்மைகள் படம் முடிந்தபின் நம் மனதில் ஆழ்மான பதிவை ஏற்படுத்திச் செல்கின்றன.

ஸ்வாதி முத்தினெ மலெ ஹனியே என்றால் ஸ்வாதி நட்சத்திரத்திம் ஆகாயத்தில் தெரியும் சமயத்தில் சரியாக சிப்பிக்குள் விழும் மழைத்துளி முத்தாகிறது என்று அர்த்தமாகும்.